0 Comments
Published on: Friday, January 3rd, 2020 at 10:31 PM
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாஜக இதுவரை இல்லாத அளவிற்கு கூடுதல் இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. அது பாஜகவினருக்கே இன்ப அதிர்ச்சியாக உள்ளது.
அண்மைகாலத்தில் தமிழ்நாட்டில் எந்த மூலைமுடுக்கில் போராட்டம் நடந்தாலும், முதல் முழக்கமாக இருப்பது பாஜகவுக்கு எதிரானதுதான். அந்த அளவுக்கு தமிழர்களின் ரத்தத்தில் பாஜக எதிர்ப்பு வெறி ஊறிவிட்டதால், இங்கு தாமரை மலரவே மலராது என்பதுதான் பலரின் கூற்றாக இருந்து வந்துள்ளது. அதை உண்மை என உணர்த்தும் விதமாக கடந்த சட்டமன்ற இடைத் தேர்தலிலும் சரி, தமிழகத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் சரி… பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. அதே கதைதான், ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும் என கூறப்பட்ட நிலையில், அதை பொய்யாக்கியுள்ளது தேர்தல் முடிவு.
கடந்த 2011ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கைகோர்த்துவிட்ட நிலையில், பாஜகவுடன் இனி ஒருபோதும் கூட்டணி இல்லை என மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, ஆணித்தரமாக கூறிவிட்டார். இதனால், அப்போது தனித்து களம் கண்ட பாஜக, 29 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளையும், 4 மாவட்ட கவுன்சிலர் இடங்களையும் பெற்றது.
தற்போது ஊரக பகுதிகளில் வேரூன்றி, கிளை பரப்பி இருக்கும் அதிமுக என்ற முதிர்ந்த மரத்தின் நிழலோடு களம் கண்ட பாஜக, கணிசமான இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் 87 இடங்களில் வெற்றிபெற்றுள்ள பாஜக, மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் 6 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது. ஆரம்பத்தில் ஒரு இடத்தில்கூட பாஜக வராது என மீம்ஸ் போடத் தொடங்கியவர்களுக்கு பெப்பே காட்டியிருக்கிறது பாஜக.
இதன்மூலம் மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் திமுக, அதிமுக, காங்கிரஸ் வரிசையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் 6வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ள பாஜக, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தேர்தலிலும் 7வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
இந்த வெற்றி எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சியோ இல்லையோ… பாஜகவுக்கு உண்மையில் இன்ப அதிர்ச்சிதான்…!
No comments yet