Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

“என் பொண்ணுக்கு மூச்சு திணறுதுடா டேய்” லாட்டரி சீட்டால் குடும்பத்துடன் உயிர் துறந்த தொழிலாளி – பின்னணி என்ன?

0 Comments

Published on: Friday, December 13th, 2019 at 11:22 PM

விழுப்புரத்தில் 3 நம்பர் லாட்டரி சீட்டால் மூன்று குழந்தைகளுக்கு சயனைடு விஷத்தை கொடுத்து கொன்ற நகைப்பட்டறை தொழிலாளி, மனைவியுடன் தற்கொலை செய்து கொண்ட வீடியோ காட்சி தமிழகத்தை உலுக்கியிருப்பதுடன், பார்ப்பவர்களின் கண்களிலும் கண்ணீரை வரவழைக்கிறது.

விழுப்புரத்தைச் சேர்ந்த நகைப்பட்டறை தொழிலாளியான அருணுக்கு சிவகாமி என்ற மனைவியும், பிரியதர்ஷினி (5) யுவஸ்ரீ (3), பாரதி (1) என்ற 3 பெண் குழந்தைகள் உள்ளனர். நகைப்பட்டறை தொழில் நன்றாக நடந்த காலத்தில் தாராளமாக செலவு செய்து, வீட்டுத் தேவையான பொருட்கள், மனைவி, குழந்தைகளுக்கு தேவையான நகைகள் அத்தனையையும் செய்துள்ளார் அருண்.

தொழில் நன்றாக நடந்து வந்ததால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரம் பாப்பான்குளம் பகுதியில் ஒரு இடத்தை வாங்கிய அருண், வங்கிக் கடன் பெற்று, பிரமாண்டமாக வீட்டையும் கட்டினார். சுகபோகமாக வாழ்ந்த நேரத்தில் இடியாக இறங்கியது ஜி.எஸ்.டி. இதன்பிறகு நகைப்பட்டறை தொழில் நாளுக்குநாள் நசியத் தொடங்கியதால் போதிய வருமானம் இல்லாமல் தவித்து வந்துள்ளார் அருண். அந்த நேரத்தில்தான், அவருக்கு 3 நம்பர் லாட்டரி அறிமுகம் ஆகியுள்ளது.

முதல்முறை 3 நம்பர் லாட்டரி சீட்டு வாங்கியதுமே 1000 ரூபாய் பரிசு விழுந்ததால், அதை நாள்தோறும் வாங்கத் தொடங்கினார். ஓரிருமுறை பரிசு விழுந்தாலும், அவர் நினைத்தது போல் பெரிதாக ஒன்றும் கிடைக்கவில்லை. ஆனாலும் சோர்வடையாத அருண், என்றாவது ஒருநாள் பெரிய பரிசு கிடைக்கும்… அதை வைத்து கடன்களை அடைத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் நாள்தோறும் 3 நம்பர் லாட்டரி சீட்டுகளை வாங்கிக் குவித்துள்ளார்.

ஆனால், நாளுக்கு நாள் கடன்தான் பெருகியதே தவிர, அவருக்கு பெரிய பரிசு ஒன்றும் கிடைக்கவில்லை. இதனால், உறவினர்கள், நண்பர்கள் என அனைத்து தரப்பினரிடமும் கடனாளியாகி, ஏச்சு பேச்சுகள் வாங்கிய அருண், மனைவி மற்றும் குழந்தைகளின் நகைகளை விற்றதோடு, தான் ஆசையாசையாய் கட்டிய வீட்டையும் 2 ஆண்டுகளுக்கு முன்பு 26 லட்சம் ரூபாய்க்கு விற்றார். அதன்பிறகு சித்தேரிக்கரைப் பகுதியில் வாடகை வீட்டில் குடியேறிய அருண், சொந்த வீட்டை விற்ற பணத்தை வைத்து ஒரு சிலருக்கு கடனை செட்டில் செய்தபோதும், முழு கடனையும் அடைக்க முடியவில்லை. அப்போது 3 நம்பர் லாட்டரியை விடாமல் வாங்கி வந்தார் அருண்.

நாளுக்கு நாள் வளர்ந்த கடன், கழுத்தை நெறித்த வட்டி என தவித்த அருண், தனது குழந்தைகளுக்கு ஸ்கூல் பீஸ் கூட கட்ட முடியாமல் தவித்தார். இவ்வளவு நாளாக தாராளமாய் செலவு செய்து வாழ்ந்த அருணுக்கு இது மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்தியது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது இருசக்கர வாகனத்தை அடகு வைத்துதான், வீட்டுக்குத் தேவையான மளிகை பொருட்களையே வாங்கியுள்ளார்.

உறவினர்களிடமோ, நண்பர்களிடமோ எந்த உதவியும் கேட்கக் கூடாது என வைராக்கியமாக இருந்த அருண், வியாழக்கிழமை இரவு குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவு எடுத்தார். அதன்படி, தங்க நகைகளை மெருகேற்ற பயன்படுத்தும் சயனைடு விஷத்தை, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 3 குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டு, தன் மனைவியுடன் தற்கொலை செய்வதற்கு முன்பு அவர் வீடியோ ஒன்றை எடுத்து, தனது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வாட்ஸ் ஆப்பில் அனுப்பி வைத்தார்.

2 நிமிடம் 13 நொடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோவில், தனது மனைவியை தோளில் சாய்த்துக் கொண்டு பேசும் அருண். “பாஸு… தெய்வங்களே… மனுஷாளுங்களா நீங்க… தெய்வங்களப்பா நீங்க.. உங்ககிட்டதாண்டா நான் பாடம் கத்துக்கணும்.. எனக்கு தெரியாதுப்பா அதுலாம் கத்துக்க தெரியாது. கருமாந்திரம் எழவு பிடிச்சவன் நான். மனுஷாளுங்ககிட்ட நியாய தர்மம் இல்ல… என் புள்ளைங்க மூனு பேருக்கும் சயனைடு கொடுத்துட்டு உக்காந்திருக்கேன்” என்றபடி குழந்தைகளை வீடியோவில் காட்டுகிறார். பின்னர் “நானும் சாப்பிடப் போறேன். இதுக்கப்புறம் என்னால ஒண்ணுமே பண்ண முடியாது. ஜாலியா இருங்கடா அப்பா… இந்த உலகத்துல நீங்களாவது நிம்மதியா வாழ்ந்துட்டு போங்கடா.. விழுப்புரத்துல மூணு நம்பர் லாட்டரிய ஒழிச்சிடுங்கடா அப்பா. என்ன மாதிரி ஒரு 10 பேராவது பொழச்சிப்பான். இங்க எவனும் யோக்கியன் இல்லை, நானும் யோக்கியன் இல்லை. அய்யோ என் பொண்ணுக்கு மூச்சு திணறுதுடா…. ஏண்டா என்ன இப்படி வாட்டி வதைக்க வச்சிட்டிங்க” என்றபடி கதறுகிறார் அருண்.

தொடர்ந்து பேசும் அவர், “சரி நானும் இன்னும் கொஞ்ச நேரத்துல சாகத்தான் போறேன். பிரச்சனையில்ல. தங்கமே என்பார்களே அது நீங்கள்தான். நீங்க ஃப்ரீயா இருங்க ஒண்ணுமில்ல. நியாயமா எதையாவது செய்யுங்கடா.. என்னைப்போல கஷ்டப்படுறவங்களுக்கு எதையாவது செய்யுங்க… செய்ய மாட்டீங்க… இல்ல… பண்ண முடியலைன்னா கூட பரவாயில்ல.. செத்துப் போச்சு.. மூணு புள்ளயும் செத்துப் போச்சு… எனக்கும் ஊத்தி வச்சிட்டேன். சரக்குலதான் ஊத்தி வச்சிருக்கேன். நானும் என் பொண்டாட்டியும் சாப்பிட்டு மொத்தமா எங்க வேலைய முடிக்கிறோம். ஃப்ரீயா இருக்கோம். வாழ்க்கையில எவனுக்கும் தொல்ல கொடுக்க மாட்டோம். எவனுக்குமே தொல்லை இல்லாம செத்துப் போகணும். இங்க வாழ முடியலடா” என்பதோடு முடிகிறது அந்த வீடியோ.

அருணும், அவரது மனைவியும் சயனைடு குடித்த பிறகு 41 நொடிகள் ஓடும் மற்றொரு வீடியோவில் 2 குழந்தைகள் இறந்த நிலையிலும், ஒரு குழந்தை உயிருக்குப் போராடும் காட்சியும் பார்ப்பவர்களைக் கண்கலங்க வைக்கிறது. கண்டிப்பாக இதயம் பலவீனமானவர்களால் இந்த வீடியோக்களை பார்க்க முடியாது.

இந்த வந்த சிறிது நேரத்தில் அங்கு வந்த உறவினர்களும், நண்பர்களும் பார்க்க முடிந்தது அருண் குடும்பத்தினரின் உயிரற்ற சடலங்களைத் தான். ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, ஏற்கெனவே 5 பேரும் உயிரிழந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்துவிட்டனர்.

3 நம்பர் லாட்டரி சீட்டால் அருண் குடும்பத்தில் நிகழ்ந்த மரணம், இன்று தமிழகத்தையே உலுக்கியிருக்கிறது. ஆனால், இது போன்று பல மரணங்கள் 3 நம்பர் லாட்டரி சீட்டுகளால் ஏற்பட்டுள்ளன. அவை ஒன்று, இரண்டு என போய்விட்டதால், யாருடைய கவனத்தையும் பெரிதாக ஈர்க்கவில்லை. ஆனால், அந்த வேலையை அருண் செய்திருக்கிறார். இனியாவது அரசும், காவல்துறையும் விழிக்குமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet