0 Comments
Published on: Thursday, August 6th, 2020 at 7:05 PM
தங்க மதிப்பில் இனி 90% கடன் வாங்கலாம்… அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட ரிசர்வ் வங்கி…
நகைக்கடன் பெறும் போது, நகையின் மதிப்பில் 90% வரை கடனாக பெற்று கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கொரோனா காலத்தில், தற்போது வரை 1.15% அளவிற்கு வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்திருந்த நிலையில், பணவீக்கம் அதிகமாக இருப்பதால் வட்டி விகிதத்தில் இன்று எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 4 %ஆகவே தொடர்கிறது. 2020-21ம் நிதியாண்டின் 2ஆம் காலாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி எதிர்மறையாக இருக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
சாமானிய மக்கள் பெறும் தங்க நகை கடனில், தங்க நகைகளின் மதிப்பில் இனி 90% வரையில் கடன் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது முன் 75% இருந்தது. இந்த சலுகை மார்ச் 31, 2021 வரை அமலில் இருக்கும். சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெற்ற கடனை மறுசீரமைப்பு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
பணவீக்கம் தொடர்ந்து உச்சத்தில் உள்ளதாகவும், கொரோனாவால் உணவு பொருட்களின் விலை சர்வதேச நாடுகளிலும் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார். வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரூ.10 ஆயிரம் கோடியுடன் கூடுதலாக ரூ.5 ஆயிரம் கோடி நிதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments yet