Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

பெங்களூரில் காதலிக்கு அட்வைஸ்… ஆம்பூரில் வினோத தண்டனை கொடுத்த காதலன்…

0 Comments

Published on: Thursday, December 12th, 2019 at 10:01 PM

பெங்களூரில் காதலிக்கு அட்வைஸ் கொடுத்த காய்கறி வியாபாரியை, ஆம்பூர் வரை காரில் பின் தொடர்ந்து வந்து, காதலன் தண்டனை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்துார் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அழகாபுரியைச் சேர்ந்த சந்திரன், பெங்களூருவில் கடந்த 30 ஆண்டுகளாக காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். அங்குள்ள மடிவாலா பகுதியில் அவர் தங்கியுள்ள வீட்டின் உரிமையாளர் முத்தம்மாவின் சகோதரி, அங்குள்ள இளைஞர் ஒருவரை காதலித்துள்ளார். இதையறிந்து முத்தம்மா, சகோதரியை அடித்து துவைத்ததோடு, அவருக்கு அட்வைஸ் செய்யுமாறு சந்திரனிடம் கூறியுள்ளார்.

முத்தம்மா வீட்டிற்கு சென்ற சந்திரனும் வீட்டில் பார்க்கும் பையனை திருமணம் செய்து கொள்ளுமாறு, முத்தம்மாளின் தங்கைக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார். இந்த தகவலை அவரது காதலன் விக்னேஷிடம் கூறியுள்ளார் காதலி. இதைக் கேட்டதும் ஆத்திரமடைந்த காதலன் விக்னேஷ், காய்கறி வியாபாரி சந்திரனை அடித்து உதைத்து மிரட்டி வைக்க முடிவெடுத்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, சொந்த ஊரான ஆம்பூருக்குச் செல்வதாக முத்தம்மாவிடம் கூறி, தனது வீட்டை பார்த்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார். சந்திரன் சொந்த ஊருக்குச் செல்வதை அறிந்த விக்னேஷ், கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார். அதில், தனது நண்பர்கள் சுரேஷ், யஷ்வந்த் ஆகியோரையும் அழைத்துக் கொண்டார். பெங்களூரில் சந்திரன் ஏறிய பேருந்தை அவர்கள் பின் தொடர்ந்து வந்தனர்.

ஆம்பூரில் சந்திரன் பேருந்தில் இருந்து இறங்கியதும், அவரை அணுகிய விக்னேஷ் உள்ளிட்ட மூவரும், சந்திரன் மகனின் நண்பர்கள் எனக் கூறி அறிமுகமாகினர். அவரது மகனை பார்ப்பதற்காக பெங்களூரில் இருந்து வந்துள்ளதாக கூறியதும், அதை நம்பிய சந்திரன், அவர்களது காரிலேயே ஏறி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

சொந்த ஊரான அழகாபுரிக்கு செல்லும் வழியில் காரை நிறுத்தி திடீரென சந்திரனை 3 பேரும் சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் அவர் அணிந்திருந்த 3 சவரன் நகைகள் மற்றும் ரூ.85,000 ரொக்கத்தையும் பறித்துக் கொண்ட அவர்கள், காரில் இருந்து சாலையில் சந்திரனை வீசிவிட்டு தப்பியோடினர்.

காயமடைந்த சந்திரன் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட ஆம்பூர் போலீசார், பேருந்து நிலையத்தில் இருந்த சிசிடிவியில் கார் பதிவாகியுள்ளதா என பார்த்தனர். அதில் சந்திரனை கடத்தியது தொடர்பான காட்சிகள் இருந்ததால், காரின் எண்ணை வைத்து விசாரித்தபோது, அது பெங்களூரில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது என தெரியவந்தது.

அங்கு சென்று விசாரித்தபோது, விக்னேஷ் என்பவர் காரை வாடகைக்கு எடுத்தது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரித்தபோதுதான், காதல் விவகாரத்தில் காய்கறி வியாபாரி தாக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து, விக்னேஷ், சுரேஷ், யஷ்வந்த் ஆகியோரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet