Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

எச்1பி விசா என்றால் என்ன? ஏன் தடை விதித்தார் டிரம்ப்… 5 லட்சம் இந்தியர்கள் வெளியேற்றமா?!

0 Comments

Published on: Tuesday, June 23rd, 2020 at 6:24 PM

எச்1பி விசா என்றால் என்ன? ஏன் தடை விதித்தார் டிரம்ப்… 5 லட்சம் இந்தியர்கள் வெளியேற்றமா?!

எச்1 பி விசாவுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டிருப்பதால், அமெரிக்காவில் பணிபுரியும் சுமார் 5 லட்சம் இந்தியர்களை வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உயர் திறனுடைய வெளிநாட்டுப் பணியாளர்கள் அமெரிக்காவில் பணிபுரிய எச் 1 பி விசா வழங்கப்படுகிறது. எச்1 பி வைத்திருப்பவரின் மனைவி அல்லது கணவரும் அமெரிக்காவில் பணிபுரிய எச் 4 விசா வழங்கப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள் வெளிநாடுகளில் உள்ள தங்களது கிளைகளில் உள்ள  பணியாளர்களை, அமெரிக்காவில் உள்ள கிளைக்கு மாற்றிக் கொள்ள எல்1 விசாவும், மருத்துவர்கள், ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஜே 1 விசாவும், கட்டுமானம் மற்றும் உணவகங்களில் பணிபுரிய எச்2பி விசாவும் வழங்கப்படுகின்றன.

அமெரிக்கா ஆண்டுதோறும் 85 ஆயிரம் பேருக்கு எச்1பி விசா வழங்குகிறது. இதில், 70% இந்தியர்களுக்கே கிடைக்கிறது. தற்போது, 4 லட்சம் இந்தியர்கள் எச்1பி விசாவையும், ஒரு லட்சம் பேர் எச் 4 விசாவையும் பயன்படுத்தி, அமெரிக்காவில் வேலைபார்த்து வருகின்றனர். இந்த விசா மூலம் அமெரிக்காவில் 3 ஆண்டுகளுக்கு மட்டுமே பணிபுரிய முடியும்.

விசா முடிந்து 60 நாட்களுக்குள் அமெரிக்காவில் இருந்து வெளியேற வேண்டும் என்பதால், அமெரிக்காவிலேயே வாழ முடிவு செய்யும் லட்சக்கணக்கான வெளிநாட்டினர், அமெரிக்க குடியுரிமைக்கான கிரீன் கார்டு பெறுவதற்கு விண்ணப்பிக்கின்றனர். அதேபோல், இந்த ஆண்டு 2 லட்சம் இந்தியர்கள் கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

கடந்த முறை அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோதே, அமெரிக்காவில் வெளிநாட்டினரை வெளியேற்றி விட்டு, உள்ளூர் மக்களின் வேலைக்கு உறுதியளிக்கப்படும் என பிரச்சாரம் செய்தார். வெற்றி பெற்ற பிறகு, அதற்கான நேரம் பார்த்துக் காத்துக் கொண்டிருந்த டிரம்ப், கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி  கொரோனா தாக்கத்தால் பொருளாதார வீழ்ச்சியை காரணங்காட்டி எச்1பி விசாவுக்கு 60 நாட்களுக்கு தற்காலிக தடைவிதித்தார்.

அந்த தடை உத்தரவு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், எச்1பி விசாவுக்கான தடையை இந்த ஆண்டு இறுதிவரை நீட்டிப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால், 5 லட்சத்து 25 ஆயிரம் வேலைகள் அமெரிக்கர்களுக்கு கிடைக்கும் எனக் கூறியுள்ள அவர், இனி தகுதி அடிப்படையில் மட்டுமே எச்1பி விசாவை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். அதிபர் டிரம்பின் இந்த நடவடிக்கையால், தற்போது அமெரிக்காவில் தங்கி பணிபுரியும் 5 லட்சம் இந்தியர்கள் வேலையிழக்கும் அபாயம் உருவாகியுள்ளது.

ஏற்கனவே கொரோனா தாக்கத்தால் வேலையிழந்து தவிக்கும் பலர், அதிபர் டிரம்பின் உத்தரவால் ஏற்பட்டுள்ள நெருக்கடியால், விரைவில் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படும் ஆபத்து இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet