0 Comments
Published on: Wednesday, August 12th, 2020 at 8:16 PM
தேர்தலுக்கு முன்பே கலகலக்கும் அதிமுக – பாஜக கூட்டணி…! மீண்டும் தனித்துவிடப்படுகிறதா பாஜக..?
அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற குழப்பம் நீடித்து வரும் நிலையில், தமிழகத்தில் பாஜக தலைமையில்தான் கூட்டணி அமைக்கப்படும் என வி.பி.துரைசாமி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவருவதால், இப்போதே அரசியல் கட்சிகள் அதற்கான வேலைகளைத் தொடங்கி விட்டன. திமுகவில் மு.க.ஸ்டாலின் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்ற உறுதியான நிலை இருக்கும் நிலையில், அதிமுகவில் யார் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் என்ற சர்ச்சை வெடித்துள்ளது. ஓ.பன்னீர்செல்வத்தின் தர்ம யுத்தத்தால் அதிமுக இரண்டாக உடைந்த நிலையில், திடீர் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அவர் தொடர்ந்து பல அதிரடிகளை அரங்கேற்றியதால், ஓ.பன்னீர்செல்வம், துணை முதலமைச்சர் என்ற பதவியோடு அடங்கிப் போனார்.
ஆனால், அவரை கட்சிக்குள் தக்கவைத்துக் கொள்ளவும், ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ளவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். ஆனாலும், தனது ஆளுமையை தக்கவைத்துக் கொள்வதற்காக, ஓ.பன்னீர்செல்வத்தை ஓரங்கட்டும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் தன்னையே முன்னிலைப்படுத்தி வருகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இதனால், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை விட சிறந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான் என பல அமைச்சர்கள் கூட்டங்கள் மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி வருகின்றனர். இது, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா விசுவாசிகளுக்கும் கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுக்க முடியாது.
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுகவின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற குழப்பம் நிலவி வருகிறது. தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு முதலமைச்சரை தேர்வு செய்வோம் என செல்லூர் ராஜு கூறிய நிலையில், எடப்பாடியார் தான் என்றும் முதலமைச்சர் என கொளுத்திப் போட்டார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. அதையே ஆர்.பி.உதயகுமாரும் வழிமொழிந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், மறுபுறம் அமைச்சர் ஜெயக்குமாரோ, கட்சியின் சின்னமான இரட்டை இலையை முன்னிறுத்தி தேர்தலில் போட்டியிடுவோம் எனக் கூறினார்.
இதனிடையே, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தைப் போல, அதிமுக இப்போது இல்லை என ஆரணி அதிமுக எம்.எல்.ஏ. தூசி மோகன் மற்றொரு சர்ச்சையை எழுப்பியுள்ளார். இவ்வாறு தேர்தலுக்கு முன்பே அதிமுகவில் சர்ச்சைகள் வரிசைக் கட்டி நிற்கும் நிலையில், இந்த சூழலை பாஜக தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சித்து வருகிறது.
ஆம்… வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக தலைமையில்தான் கூட்டணி அமைக்கப்படும் என அக்கட்சியின் துணைத் தலைவர் வி.பி.துரைசாமி அறிவித்துள்ளார். தேசிய அளவில் கூட்டணிக்கு பாஜக தலைமை ஏற்று இருந்தாலும், தமிழகத்தைப் பொறுத்தவரை தற்போது வரை கூட்டணி தலைமை அதிமுகதான். ஆனால், வி.பி.துரைசாமியோ, இனி திமுக – அதிமுக இடையே போட்டி என்ற நிலை மாறி, திமுக – பாஜக என்ற நிலை உருவாகி இருப்பதாக தெரிவித்துள்ளார். அதற்காக சில ஊடகங்கள், இணையதளங்கள், பத்திரிகையாளர்களும் களமிறக்கப்பட்டு, எந்தவித நேர்மையும் இல்லாமல் பாஜகவை முன்னிறுத்தும் வேலைகளை செய்து வரும் நிலையில், பாஜகவின் தலைமையை ஏற்று, அனுசரித்து செல்வோரிடம் மட்டுமே கூட்டணி என்றும் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.
வி.பி.துரைசாமியின் கருத்து அதிமுகவினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக இதுபோன்ற வேலைகளில் ஈடுபடும் என்பதை தெரிந்தே ஜெயலலிதா, அந்த கட்சியை பக்கத்தில் கூட சேர்க்கவில்லை எனக் கூறும் அதிமுகவின் தீவிர விசுவாசிகள், அதை எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் கூட்டணியும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், அதுதான் ஜெயலலிதாவுக்கு செலுத்தும் விசுவாசம் என்றும் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதனிடையே, பாஜக தமிழக தலைவராக எல்.முருகன் இருந்தாலும், அவரிடம் மூத்த தலைவர்கள் சிலர் தீண்டாமையை கடைப்பிடிப்பதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது. தலித் ஒருவரை தலைவராக நியமித்து விட்டோம் என்று பாஜகவினர் மார்த்தட்டிக் கொண்டாலும், அவரை மீறியே சிலர் செயல்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு அண்மைகாலமாக எழுந்து வரும் நிலையில், எல்.முருகனும் வேதனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எல்.முருகன் தீவிர கடவுள் பக்தர் என்பதால், திமுகவுக்கு செல்லக் கூடாது என இருப்பதாகவும், இதனால், பாஜகவில் இருந்து வெளியேறி அதிமுகவில் இணைய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தினால், அதிமுகவை இரண்டாக உடைத்து, பாஜகவில் இணைப்பது குறித்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே அதிமுக – பாஜக கூட்டணியில் இத்தனை சர்ச்சை வெடித்துள்ள நிலையில், இவர்கள் வெற்றிபெற்று ஆட்சியமைத்தால், தற்போதுபோல ஆட்சி நீடிக்குமா? என பலதரப்பினரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர். பொறுத்திருந்து பார்ப்போம்… மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு..!
No comments yet