0 Comments
Published on: Monday, August 3rd, 2020 at 12:42 PM
சந்திரமுகி வில்லனின் பிறந்தநாள் பரிசு… 3 லட்சம் வேலை அறிவித்து ரியல் ஹீரோவான மனுசன்…
சந்திரமுகி, ஒஸ்தி உள்ளிட்ட படங்களில் வில்லன் வேடத்தில் நடித்த சோனுசூட் தனது பிறந்தநாள் பரிசாக 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை அறிவித்து, ரியல் ஹீரோவாக உயர்ந்துள்ளார்.
தமிழில் கள்ளழகர் தொடங்கி, சந்திரமுகி, ஒஸ்தி, தேவி உள்ளிட்ட பல தமிழ் படங்களில் வில்லன் வேடங்களில் நடித்துள்ளவர் சோனு சூட். பிரபல இந்தி நடிகரான இவர், கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆதரவற்ற பலருக்கு உதவிக்கரம் நீட்டி தொடர்ந்து சேவையாற்றி வருகிறார். இதன்மூலம் படத்தில் வில்லனான இவர், உண்மை வாழ்க்கையில் ரியல் ஹீரோவாக மாறியுள்ளார்.
ஊரடங்கின்போது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு, தங்கும் வசதி உள்ளிட்ட பல உதவிகளை செய்து வந்த இவர், அண்மையில் தன் மகள்களை ஏரில் பூட்டி நிலத்தை உழுத ஆந்திர மாநில விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்கி பரிசளித்து அனைவரது பாராட்டையும் பெற்றார்.
வாழ்வாதாரத்திற்காக சாலையோரத்தில் சிலம்பம் சுற்றி பிழைத்த மூதாட்டியை தற்காப்பு கலை பயிற்சியாளராக மாற்றினார். இது போன்ற சேவைகளால் மக்களிடையே மேலும் பிரபலமடைந்து வருகிறார் சோனு சூட்.
இதனிடையே, சோனு சூட் பிறந்தநாள் அண்மையில் கொண்டாடப்பட்டது. அவருக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில், பிறந்தநாள் பரிசாக கொரோனாவால் வேலை இழந்த 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வாங்கித் தர உள்ளதாக அறிவித்துள்ளார்.
இதற்காக தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து இந்த பணியை மேற்கொள்ள சோனு சூட் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்கென தனி வலைதளப் பக்கத்தையும் அவர் தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments yet