Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

96 பட பாணியில் துளிர்ந்த காதல்… கொலை செய்துவிட்டு பாபநாசம் பாணியில் நாடகம் நடத்திய மன்மதராசா…

0 Comments

Published on: Wednesday, December 11th, 2019 at 9:51 PM

விஜய் சேதுபதி – த்ரிஷா நடித்து பிரமாண்ட வெற்றிபெற்ற 96 பட பாணியில் பள்ளிக்கால காதலியை சந்தித்த நபர், மனைவியை கொலை செய்துவிட்டு, பாபநாசம் பட பாணியில் போலீசாரிடம் நாடகமாடினார். ஆனால் தொழில்நுட்ப உதவியுடன் கொலையாளியை கைது செய்த போலீசார், அவரை கம்பி எண்ண சிறைக்கு அனுப்பினர்.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அழுகிய நிலையில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் சாலையோரப் பள்ளத்தில் கிடந்தது. அதைக் கைப்பற்றிய போலீசார், பெண் யாரும் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியும் அவர் யார் என்பதை அறிய முடியவில்லை. அதே நேரத்தில் கேரள மாநிலம் கேட்டயம் அடுத்த சங்கனாச்சேரியைச் சேர்ந்த பிரேம் குமார் என்பவர், தனது மனைவி வித்யாவை கடந்த சில நாட்களாக காணவில்லை எனக் கூறி அம்மாநில போலீசில் புகார் அளித்தார்.

வித்யாவுக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருந்ததாகவும், அதை தான் தட்டிக் கேட்டதால் எங்கே சென்றார் என தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், அவரது செல்போன் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து, வித்யா கடைசியாக எங்கே செல்போனை பயன்படுத்தியுள்ளார் என சிக்னலை ஆய்வு செய்தபோது, அது திருவனந்தபுரத்தை காட்டியுள்ளது. அதே இடத்தில் பிரேம்குமாரின் செல்போனும் பயன்படுத்தப்பட்டிருப்பதை போலீசார் கண்டறிந்தனர்.

இதையடுத்து, பிரேம்குமாரிடம் கிடுக்கிப்பிடி விசாரணையை போலீசார் மேற்கொண்டபோது, அதற்கு ஒத்துழைக்காமல் குழந்தைகளுடன் அழுது அடம் பிடித்துள்ளார். ஆனாலும், போலீசார் விடாததால், உயரதிகாரிகளை நாடிய பிரேம்குமார், போலீசார் தன்னை தொடர்ந்து துன்புறுத்துவதாக புகார் அளித்தார். இதனால், பிரேம்குமார் கொலை செய்திருக்க மாட்டார் என எண்ணிய போலீசார், அடுத்ததாக, வித்யாவின் செல்போன் எங்கிருக்கிறது என ஆய்வு செய்தனர். அப்போது வேறு ஒரு சிம் மூலம் பீகாரில் செல்போன் இயங்குவது போலீசாருக்கு தெரியவந்தது. இதனால், வித்யா தனது கள்ளக்காதலனுடன் பீகாருக்கு சென்றுவிட்டதாக நம்பி, போலீசாரும் அந்த வழக்கை கிடப்பில் போட்டுவிட்டனர்.

போலீசாரின் பார்வை தன் மீது இருந்து விலகிவிட்டதை அறிந்து கொண்ட பிரேம் குமார், திருவனந்தபுரத்தில் வேறு ஒரு பெண்ணுடன் வசித்துள்ளார். இதனிடையே, நெல்லை மாவட்டம் வள்ளியூரில் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டது வித்யா தான் என்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதனால், வித்யா வழக்கை தூசி தட்டிய போலீசார், திருவனந்தபுரத்தில் வேறு ஒரு பெண்ணுடன் வசித்த பிரேம்குமாரை பிடித்து விசாரித்தனர். வழக்கம்போல் பிடி கொடுக்காத பிரேம்குமாரை, தங்கள் பாணியில் கவனித்து உண்மையைக் கக்க வைத்தனர் காவல்துறையினர்.

கேரள மாநிலம் சங்கனாச்சேரியைச் சேர்ந்த பிரேம்குமார், திருவனந்தபுரத்தில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். அவருக்கு வித்யா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், பிரேம்குமாரின் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து, பள்ளிக்கால நண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். அதில், பிரேம்குமாரின் பள்ளிக்கால காதலியான சுனிதா பேபியும் பங்கேற்றார். அப்போது இருவரும் பழைய காதல் குறித்து மனம் விட்டு பேசியபோது, தனது கணவரை பிரிந்து தனியாக வாழ்வதை சுனிதா பேபி கூறியுள்ளார்.

அவருக்கு பிரேம்குமார் ஆறுதல் கூறியதை அடுத்து, பள்ளிக்கால காதல் மீண்டும் துளிர்விட்டுள்ளது. இதையடுத்து, ஹைதராபாத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு இடம்பெயர்ந்த சுனிதா பேபி, மருத்துவமனை ஒன்றில் தலைமை நர்சாக பணியாற்றினார். பிரேம்குமாரும், சுனிதா பேபியும் கள்ளக்காதலில் இருப்பதை அறிந்த வித்யா, இது குறித்து பிரேம்குமாரிடம் சண்டை போட்டுள்ளார். இதனால், குண்டாக இருக்கும் வித்யாவை கொலை செய்துவிட்டு, ஸ்லிம்மாக இருக்கும் சுனிதா பேபியுடன் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளார் பிரேம்குமார்.

இதையடுத்து, உடல் எடையைக் குறைக்க திருவனந்தபுரம் செல்லலாம் எனக் கூறி வித்யாவை அழைத்துச் சென்று, சுனிதா பேபி வீட்டில் தங்கவைத்துள்ளார். சுனிதா பேபிதான், தனது கணவரின் கள்ளக்காதலி என்பதை தெரியாத வித்யா, அவருடன் சகஜமாக பேசியுள்ளார். இரவு உணவு முடித்த பிறகு, மருந்து எனக் கூறி தனது மதுவை ஊற்றிக் கொடுத்துள்ளார் பிரேம்குமார். அதைக் குடித்த வித்யா போதையில் தள்ளாடியதும், அவரை படுக்கையில் தள்ளி பிரேம்குமாரும், சுனிதாவும் கழுத்தை நெரித்துக் கொலை செய்தனர்.

பின்னர் வித்யாவின் உடலை காரில் ஏற்றிய பிரேம்குமார், அவரது செல்போனையும் ஆஃப் செய்துள்ளார். நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியில் வித்யாவின் சடலத்தை வீசிய பிரேம்குமார், திருவனந்தபுரத்தில் இருந்து மும்பைக்கு செல்லும் நேத்ராவதி எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்த குப்பைத் தொட்டியில் வித்யாவின் செல்போனை வீசிவிட்டு வந்துள்ளார். அந்த செல்போனை எடுத்த யாரோ ஒருவர், பீகாரில் அதற்கு வேறு ஒரு சிம்மை போட்டு பயன்படுத்தியுள்ளார்.

வித்யாவை கொலை செய்தவற்றை ஒப்புக்கொண்ட பிரேம்குமார், மலையாளத்தில் மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் படத்தை பார்த்துதான், கொலையை மறைத்ததாக கூறி, போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளார். இந்த த்ரிஷ்யம் படம் தான் தமிழில் கமல் நடித்த பாபநாசம்.

96 படத்தை படத்தைப் போல, பள்ளிப்பருவ காதலை புதுப்பித்த பிரேம்குமார், சுனிதா பேபி ஜோடி தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறது. ஆனால், அவர்களது பிள்ளைகள்தான் தற்போது ஆதரவற்று நிற்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet