Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

7 தொகுதியில் போட்டியிடும் தேமுதிக – விஜயகாந்தை சந்தித்து கூட்டணியை உறுதி செய்த ஓ.பி.எஸ்…!

0 Comments

Published on: Monday, March 4th, 2019 at 9:48 PM

சென்னையில் விஜயகாந்தை நேரில் சந்தித்துப் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக கூட்டணியில் 7 தொகுதிகள் ஒதுக்குவதாக கூறியதாகவும், அதை தேமுதிக ஏற்றுக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி சேருவது என மதில்மேல் பூனையாக வலம் வருகிறது தேமுதிக. அதேநேரத்தில் தேமுதிகவை எப்படியாவது தங்கள் பக்கம் இழுத்துவிட வேண்டும் என்ற உறுதியில் திமுக, அதிமுகவும் தொடர்ந்து ரகசியப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.

அதிமுக கூட்டணியில் இடம்பிடிக்கவே பிரேமலதாவும், சுதீஷும் விரும்பும் நிலையில், திமுக கூட்டணியில் சேரலாம் என தேமுதிக தொண்டர்கள் விருப்பம் தெரிவிப்பதோடு, நிர்வாகிகள் மூலம் கட்சி மேலிடத்திற்கும் தகவல் அனுப்பி வருகின்றனர்.

தேமுதிக தொண்டர்களின் மனநிலையிலேயே இருக்கும் விஜயகாந்தும், திமுக கூட்டணியில் 5 இடங்கள் கொடுத்தால் கூட போதும் என்கிறாராம். ஆனால், அதற்கு தொடர்ந்து முட்டுக்கட்டைப் போடும் பிரேமலதாவும், சுதீஷும், அதிமுக உடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

தேமுதிக தலைமையிலேயே ஏகப்பட்ட குழப்பங்கள் நிலவியதால்தான், ஆலோசனைக் கூட்டம் நடத்தி முடிவு செய்யலாம் என திட்டமிட்டிருந்த நிலையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் விஜயகாந்தை, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார்.

அப்போது, பழைய பகைகளை மறந்துவிட்டு, அதிமுக கூட்டணியில் இணையுமாறு, ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்தாராம். அதற்கு விஜயகாந்த் பதில் ஒன்றும் சொல்லாமல் இருந்த நிலையில், பிரேமலதாவும், சுதீஷும் ஒப்புதல் தெரிவித்து விட்டார்களாம். அதனால் வேறு வழியில்லாமல் விஜயகாந்தும் அதிமுக கூட்டணியை ஏற்றுக் கொண்டுவிட்டாராம்.

அப்போது தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு நிகராக 7 இடங்களைத் தர முடிவு செய்துள்ளதாக கூறியதும், அதற்கும் பிரேமலதா, சுதீஷ் ஒப்புக்கொண்டுவிட்டார்களாம். எனவே நாளை கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதன்ப்பின்னர் தான், விஜயகாந்த் வீட்டிற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், நாளைக்குள் நல்ல முடிவு கிடைக்கும் என தெரிவித்துவிட்டு, புன்னகையுடன் புறப்பட்டார். இதனால் திமுகவை விட, தேமுதிக தொண்டர்களே அதிக அப்செட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet