0 Comments
Published on: Tuesday, June 9th, 2020 at 8:30 PM
கோமதி மாரிமுத்துவுக்கு 4 ஆண்டு தடை – சதிதான் காரணமா?
ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து சோதனையில் தோல்வி அடைந்ததால், அவருக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் மணிகண்டத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து, கத்தார் தலைநகர் தோஹாவில் கடந்த 2019ல் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, ஆசிய தடகளப் போட்டி வரை சென்ற கோமதி, 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்று, தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இதன்மூலம் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கும் கோமதி மாரிமுத்து தகுதி பெற்றார்.
800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்றதால், அவரை 400 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் பங்கேற்க செய்வதற்கான ஏற்பாடுகளை இந்திய தடகளச் சம்மேளனம் செய்த நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் தோல்வி அடைந்தார்.
நான்ட்ரோலன் என்ற ஸ்டீராய்டு மருந்தை அவர் உட்கொண்டிருப்பதாக பரிசோதனையில் தெரியவந்ததை அடுத்து, உலக தடகளப் போட்டியில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவருக்கு மீண்டும் நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனையிலும் அவர் தோல்வி அடைந்துள்ளதால், கோமதி மாரிமுத்து தடகளப் போட்டிகளில் பங்கேற்க 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ள தடகள ஒழுங்குக் குழு, தோஹா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கைப்பற்றிய தங்கத்தையும் பறிமுதல் செய்துள்ளது. இதனால், கோமதி மாரிமுத்து வரும் 2023ஆம் ஆண்டு மே மாதம் வரை தடகளப் போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், கோமதி தகுதிநீக்க விவகாரத்தில் அரசியல் இருப்பதாக, பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஏழ்மையான நிலையில் இருந்து முன்னேறி வருபவர்களை ஒழிக்க இதுபோன்ற திட்டங்கள் சர்வதேச அளவில் மட்டுமின்றி, உள்ளூரிலும் அரங்கேறி வருவது வாடிக்கையானது என்றும் விளையாட்டு விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்ரனர். இந்நிலையில், தான் எவ்வித தவறும் செய்யவில்லை எனக் கூறியுள்ள கோமதி மாரிமுத்து, 4 ஆண்டு தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்.
No comments yet