Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

போதை ஊசிக்கு தூக்க மாத்திரை – மாரடைப்பில் உயிரிழந்த சிறுவன்…

0 Comments

Published on: Sunday, May 17th, 2020 at 7:36 PM

போதை ஊசிக்கு தூக்க மாத்திரை – மாரடைப்பில் உயிரிழந்த சிறுவன்…

சேலத்தில் போதைக்காக தூக்க மாத்திரையை நீரில் கலந்து ஊசி மூலம் செலுத்திக்கொண்ட சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்த லதாவின் மகன் 17 வயதான அஜித்குமார். ஐந்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு வெள்ளிப்பட்டறை ஒன்றிற்கு வேலைக்கு சென்று கொண்டிருந்த அஜித்குமாருக்கு, மது குடிக்கும் பழக்கமும் இருந்துள்ளது.

ஊரடங்கால் மதுக்கடைகள் மூடப்பட்டதால் சிறுவன் அஜித்குமார் மது குடிக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். அஜித்தும் அவனது நண்பர்கள் சிலரும் சேர்ந்து, மருந்து கடைகளில் விற்கப்படும் தூக்க மாத்திரைகளை வாங்கி அதை தண்ணீரில் கலந்து பின்னர் ஊசி  மூலம் கைகளில் ஏற்றி போதையில் சுற்றி திரிந்துள்ளனர்.

அஜித் குமாரின் புதுவிதமான போதையை தெரிந்து கொண்ட தாயார் லதா மற்றும் அக்கம்பக்கத்தினர், அஜித்குமாரையும், அவனது நண்பர்களையும் திட்டியுள்ளனர். ஆனாலும் அடங்காத அஜித் குமாரும், அவனது நண்பர்களும் போதை ஊசியிலேயே உற்சாகமாக சுற்றியுள்ளனர்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை அஜித்குமார் வெளியில் சென்றுவிட்டு தூக்க மாத்திரைகளை வாங்கி வந்து அதை தண்ணீரில் கலந்து ஊசி மூலம் உடலில் செலுத்தியபோது, திடீரென அவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

வலி தாங்க முடியாமல் அலறித் துடித்த அஜித்குமாரை அப்பகுதியினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனாலும், வழியிலேயே அஜித்குமார் படாதபாடுபட்டு உயிரிழந்து விட்டார்.

அஜித்குமார் வீட்டுக்கு வந்த போலீசார், 5 தூக்க மாத்திரைகள் மற்றும் ஊசி ஆகியவற்றை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். இந்த போதை மாத்திரைகளை அஜீத்குமாரும், அவனது நண்பர்களும் எந்த மருந்து கடையில் வாங்கினார்கள் என்றும் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும், அஜித்குமார் போல வேறு யாரும் போதை ஊசிக்கு அடிமையாகி உள்ளார்களா? என கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், மருந்து கடைகளில் டாக்டர்கள் மருந்து சீட்டில்லாமல் தூக்க மாத்திரை மற்றும் உடல் வலி மாத்திரைகளை விற்க கூடாது என்றும், அப்படி மாத்திரைகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet