0 Comments
Published on: Thursday, March 14th, 2019 at 8:25 PM
பொள்ளாச்சி பாலியல் வன்கொடூர வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்த நிலையில், தற்போது சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால், பல திடுக்கும் உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேஸ்புக் மூலம் நட்பாக பழகிய பெண்களை அடித்து துன்புறுத்தி, பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில், திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகிய 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த வழக்கு விவகாரம் வெளியில் வந்ததும், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பார் நாகராஜ் உள்பட பல அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு தொடர்பு இருக்கும் என கூறப்பட்ட நிலையில், வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு மாற்றியது.
இதனிடையே, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றும் தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதற்காக, பல கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் வலியுறுத்தலை அடுத்து, சிபிசிஐடி விசாரித்து வரும் வழக்கை, சிபிஐ விசாரணைக்கு மாற்றி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால், பாலியல் வன்கொடூர வழக்கில் தொடர்புடைய பல முக்கிய குற்றவாளிகள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கோவை அருகே சின்னப்பம்பாளையத்தில் உள்ள திருநாவுக்கரசு பண்ணை வீட்டில் சோதனை செய்த சிபிசிஐடி போலீசார், அங்கிருந்து லேப்டாப், பென் டிரைவ் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவற்றில் பல பெண்களை பாலியல் வன்புணர்வு செய்த வீடியோக்கள் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
No comments yet