Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.25 லட்சம்… போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை – உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு…

0 Comments

Published on: Friday, March 15th, 2019 at 8:51 PM

பொள்ளாச்சியில், பாலியல் வன்கொடுமை சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, ரூ.25 லட்ச இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ள உயர்நீதிமன்ற கிளை, பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளியிட்ட காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவும் ஆணையிட்டுள்ளது.

திருச்சியை சேர்ந்த இளமுகில் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலியல் வன்கொடூரம் தொடர்பான வழக்குகளில் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளிப்படுத்தக் கூடாது என சட்டமும், உச்சநீதிமன்ற உத்தரவும் உள்ளதாக வாதிட்டார். ஆனால், பொள்ளாச்சி விவகாரத்தில் இது முறையாக கடைபிடிக்கப்படவில்லை என்றும், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றிய தமிழ்நாடு அரசின் அரசாணையிலும் கூட பாதிக்கப்பட்டவர் தொடர்பான அடையாளம் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து, பொள்ளாச்சி விவகாரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருவதாகக் கூறிய நீதிபதிகள், விதிகளும் உத்தரவுகளும் இருந்தும், துணிச்சலாக முன்வந்து புகார் அளித்த அந்தப் பெண்ணின் அடையாளத்தை வெளியிட்டது ஏன்? என கேள்வி எழுப்பினர். இவ்வாறு செய்தால் இது தொடர்பாக புகார் அளிக்க யார் முன்வருவர்? என்றும் நீதிபதிகள் கடுமையாக கேள்வி எழுப்பினர்.

பாலியல் வன்கொடூரம் தொடர்பான வீடியோ பல லட்சக்கணக்கானோரால் பகிரப்படுவது சமூக பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், தவறு செய்ய தூண்டும் என்றும் மனநல மருத்துவர் ஷாலினி தெரிவித்திருப்பதாக நீதிபதிகள் கூறினர். பல குடும்பங்களில் பெண் குழந்தைகளுக்கு போதிய அன்பும், அக்கறையும் காட்டப்படாததே இது போன்ற சிக்கல்களில் அவர்கள் எளிதாக சிக்க காரணம் ஆவதாகவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

பொள்ளாச்சி வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை திரும்பப் பெற்று, பாதிக்கப்பட்டவரின் அடையாளமின்றி புதிதாக அரசாணை வெளியிட தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பொள்ளாச்சி விவகாரம் தொடர்பான புகைப்படங்கள் வீடியோக்களை இணையதளங்களில் இருந்து நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் ஆணையிட்டனர்.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளியிட்டதற்காக, அவருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடாக, தமிழக அரசு வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கின் துவக்க நிலையிலேயே, நான்கு பேர் தான் குற்றவாளிகள், நான்கு வீடியோக்கள் தான் உள்ளது எனக்கூறிய காவல்துறை அதிகாரி மீது, துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட இளம்பெண்கள், பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் உள்ளதாகவும் தகவல் வருவதாகவும், இதை மறுப்பதற்கு இல்லை எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையின் வரம்பிற்கு அப்பாற்பட்டது என்பதால் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வுக்கு மாற்றியும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet