Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

பஞ்சாமிர்தம் விற்று பல கோடி பதுக்கல்… காட்டிக் கொடுத்த டைரி…

0 Comments

Published on: Tuesday, September 3rd, 2019 at 11:01 AM

பழனியில் சித்தனாதன் மற்றும் கந்தவிலாஸ் பஞ்சாமிர்த கடை உரிமையாளர்கள் ரூ.94 கோடி வருவாயை மறைத்திருப்பது, வருமான வரித்துறை சோதனையில் தெரியவந்துள்ளது. ஒரு சின்ன டைரியில் இருந்த குறிப்புகள் மூலம் இந்த வரி ஏய்ப்பு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள், முக்கிய பிரசாதமாக பஞ்சாமிர்தத்தை வாங்கிச் செல்கின்றனர். சுவை மிகுந்த இந்த பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது. பழனி கிரிவீதியில் உள்ள பிரபல கந்தவிலாஸ் விபூதி ஸ்டோர் மற்றும் சித்தனாதன் பஞ்சாமிர்த கடைகளில், முருக பக்தர்கள் அதிக அளவில் பஞ்சாமிர்தம் மற்றும் விபூதியை வாங்கிச் செல்வது வாடிக்கை. எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும் இந்த இரு கடைகளிலும் விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு உரிய ரசீது வழங்கப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது.

இதன்மூலம் கடந்த பல ஆண்டுகளாக அவர்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த தகவலின் பேரில், இரு கடைகளிலும் கடந்த வியாழக்கிழமை முதல் 3 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பஞ்சாமிர்தம் தயாரிக்க வாங்கப்படும் மூலப்பொருட்கள், விற்கப்படும் பஞ்சாமிர்தம், வேலையாட்கள் சம்பளம் ஆகியவற்றுக்கு கணக்குகள் சரியாக உள்ளதா என ஆராய்ந்தனர். ஆனால், இரு கடைகளின் உரிமையாளர்களும் கடந்த 3 தலைமுறைகளாக வாய்மொழியாக தொழில் நடத்தியதால், வரவு – செலவு ஆவணங்கள் முறையாக வைத்திருக்கவில்லை என்பது தெரிய வந்தது.

மேலும், இரு கடைகளும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை என்பதும், அவர்கள் 200 பேர் கொண்ட கூட்டுக் குடும்பமாக வாழ்வதும் தெரியவந்தது. இதையடுத்து, குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராக விசாரித்த வருமான வரித்துறை அதிகாரிகள், நாளொன்றுக்கு ஒரு லட்சத்திலிருந்து 2 லட்சம் வரை வருவாய் இருக்கும் நிலையில், ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரம் மட்டுமே என கணக்கு காட்டியதை கண்டறிந்தனர். சுமார் ரூ.94 கோடி வருவாய் மறைக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்திய நிலையில், பெரும் பகுதி வருவாயை தங்கத்தில் முதலீடு செய்திருப்பதும் வருமான வரித் துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, கணக்கில் வராத ரூ.22 கோடி மதிப்பிலான தங்கம், ரூ.3 கோடி ரொக்கம், ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். வரி ஏய்ப்பை ஒப்புக் கொண்ட கந்தவிலாஸ் மற்றும் சித்தனாதன் குழுமத்தினர், வரியை செலுத்த சம்மதம் தெரிவித்து இருப்பதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள வருமான வரித்துறை அதிகாரிகள், முதல்நாள் சோதனையில் ஒரு சிறிய டைரி சிக்கியதாக தெரிவித்துள்ளனர்.

நாள்தோறும் விற்பனை முடிந்து, பணத்தை சாக்கு மூட்டையில் அள்ளிச் செல்லப்பட்ட விவரம், டைரி குறிப்பில் இருந்து கிடைத்ததாகவும், அதன் அடிப்படையிலேயே ரூ.94 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு தெரியவந்ததாகவும் கூறியுள்ளனர். இந்த தொகையும் கடந்த 5 ஆண்டுகளுக்கு மட்டுமே உள்ள தொகை எனக் கூறியுள்ள அதிகாரிகள், அதற்கு முன்பு எவ்வளவு கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்துள்ளது என விசாரணையில் தெரியவரும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet