Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

தொழிலதிபர் அனில் அம்பானி 4 வாரத்தில் ரூ.453 கோடியை செலுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

0 Comments

Published on: Wednesday, February 20th, 2019 at 4:56 PM

எரிக்சன் நிறுவனம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அனில் அம்பானி குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 4 வாரத்தில் 453 கோடி ரூபாயை அந்த நிறுவனத்திற்கு வழங்காவிட்டால் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

தொலை தொடர்பு வர்த்தகத்தில் ஸ்வீடனைச் சேர்ந்த எரிக்சன் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்ட அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேசன் நிறுவனம், அந்த நிறுவனத்துக்கு 1600 கோடி ரூபாய் தரவேண்டியிருந்தது. நீதிமன்றத்தில் மூலம் இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டு 550 கோடி ரூபாயை கடந்த ஆண்டு செப்டம்பர் 20 ஆம் நாளுக்குள் பெற்றுக் கொள்ள எரிக்சன் நிறுவனம் சம்மதித்திருந்தது. இருந்தும், தங்களுக்கு நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை என்று, எரிக்சன் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், அனில் அம்பானி நிறுவனம் 550 கோடி ரூபாயை கடந்த ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என அக்டோபர் மாதம் உத்தரவிட்டது. தாமதம் ஏற்பட்டால் 12 சதவீத வட்டியுடன் சேர்த்து செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் 550 கோடி ரூபாயை அனில் அம்பானி நிறுவனம் வழங்கவில்லை என்று கூறி எரிக்சன் நிறுவனம் அனில் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் டெலிகாம் தலைவர் சதிஷ் சேத், ரிலையன்ஸ் இன்பிரா டெல் தலைவர் சாயா விரானி ஆகியோருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.

வழக்கின் விசாரணையின் போது ரபேல் ஒப்பந்தத்தில் முதலீடு செய்ய மட்டும் அனில் அம்பானிக்கு பணம் இருக்கிறது ஆனால், தங்களுக்கு தர முடியவில்லை என்று எரிக்சன் தரப்பு வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார். இதற்கு ரிலையன்ஸ் கம்யூனிகேசன் சொத்துக்களை முகேஷ் அம்பானி நிறுவனத்திற்கு விற்கும் முயற்சி தோல்வி அடைந்து விட்டதாக அனில் அம்பானி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விசாரணை முடிந்து கடந்த 13 ஆம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

நீதிபதிகள், ஆர் எப் நாரிமன், வினீத் சரன் ஆகியோர் தற்போது வழங்கியுள்ள தீர்ப்பில், அனில் அம்பானி நீதிமன்ற உத்தரவை மீறியது தெளிவாகியுள்ளதால், அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அனில் அம்பானி நீதிமன்ற கருவூலத்தில் 118 கோடி ரூபாய் செலுத்தியுள்ள நிலையில், அபராதம் ஒருகோடி ரூபாயுடன் சேர்த்து, 453 கோடி ரூபாயை 4 வாரத்தில் அனில் அம்பானி வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். அவ்வாறு வழங்க தவறினால் அனில் அம்பானி மற்றும் இயக்குநர்கள் 2 பேருக்கும் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அனில் அம்பானியின் நிபந்தனையற்ற மன்னிப்பையும் ஏற்க மறுத்த நீதிபதிகள், அபராதத் தொகையை செலுத்தாவிட்டால் ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர். 45 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமையில் சிக்கி இருக்கும் அனில் அம்பானிக்கு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet