Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

தேமுதிகவுக்கு இடம் ஒதுக்கீடா? – ’நோ’ சொன்ன ஸ்டாலின்… 20 இடங்களில் போட்டி என திட்டவட்டம்

0 Comments

Published on: Thursday, March 7th, 2019 at 1:29 PM

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 20 இடங்களில் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால், தேமுதிக தரப்பு விழிபிதுங்கி நிற்கிறது.

நாடாளுமன்றத்தேர்தலில் திமுக உடன் கூட்டணி வைக்கலாம் என விஜயகாந்த் ஆரம்பம் முதலே கூறிவந்தாலும், பாஜக கூட்டணியிலேயே நீடிக்க வேண்டும் என பிரேமலதாவும், சுதீஷும் உறுதியாக இருந்தனர். விஜயகாந்த் எவ்வளவோ எடுத்துக் கூறினாலும், அதை மனைவியும் மச்சானும் கேட்டதாக தெரியவில்லை.

இதனிடையே, விஜயகாந்தை, அவரது வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்த மு.க.ஸ்டாலின், பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, உடல் நலம் விசாரிக்க வந்ததாக, நாகரீகமாக சொல்லிவிட்டுச் சென்றார். அந்த நாகரீகத்தை பின்பற்றாமல், அரசியல் பேசியதாக பிரேமலதா போட்டு உடைத்தார். இதனால் கடுப்படைந்த திமுக தரப்பு அடுத்தடுத்த பணிகளில் தீவிரமாக இருந்தது.

இருப்பினும், கூட்டணிக்கு தேமுதிக வரும் என காத்திருந்த திமுக, ஒரு கட்டத்தில் வெறுப்படைந்து, காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் என தனது கூட்டணி கட்சிகளுக்கு அபரிமிதமான சீட்டுகளை ஒதுக்கிவிட்டு, தனக்காக 20 சீட்டுகளை மட்டும் வைத்துக் கொண்டு, தொகுதி பங்கீடு நிறைவடைந்துவிட்டதாக அதிரடியாக அறிவித்தது.

பாஜக கூட்டணியில் நீடிக்க வேண்டும் என தேமுதிக விரும்பினாலும், தொண்டர்களும், மாவட்டச் செயலாளர்களும், அதை விரும்பவில்லை. இதனால், திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்தலாம் என முயற்சித்தபோது, திமுக கதவு அடைக்கப்பட்டதை திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இருந்தாலும், துரைமுருகனை தேமுதிக நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர். அப்போதும் திமுகவில் இடமில்லை என்பது திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், விஜயகாந்த் உடல் நலம் விசாரிக்க வந்ததாக மு.க.ஸ்டாலின் கூறியதை மறுத்து, அரசியல் பேசியதாக பிரேமலதா காட்டிய கெத்துக்கும் துரைமுருகன் செக் வைத்தார். தேமுதிகவினர் தம்மை அணுகியது முதல், அவர்களை வீட்டில் இருந்து வெளியேற்றியதுவரை அப்படியே புட்டுபுட்டு வைத்தார். இதைப் பார்த்ததும் தேமுதிக தொண்டர்கள் துரைமுருகன் மீது கடுப்பானதைவிட, பிரேமலதா மற்றும் சுதீஷின் பேராசை மீது அதிகமாக கோபமடைந்தனர்.

மற்றொரு புறத்தில் பாமகவுக்கு இணையாக சீட் ஒதுக்க வேண்டும் அதிமுகவிடம் தேமுதிக அடம்பிடித்ததால், அங்கும் இழுபறி நீடிக்கிறது. இதனால், தற்போது என்ன செய்வதென்றே தெரியாமல் விழிபிதுங்கி போய் நிற்கிறது தேமுதிக.

அதிமுக – திமுக இரு கட்சிகளுடன் கூட்டணி பற்றி பேசி, யார் அதிகமாக பணமும், இடமும் தருகிறார்களோ, அவர்களிடம் சேர்ந்து கொள்ளலாம் என பேராசையுடன் காத்திருந்த பிரேமலதா, சுதீஷுக்கு இரு கட்சிகளுமே கிட்டத்தட்ட ஆப்பு அடித்துவிட்டன.

இருந்தாலும், திமுக கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு இருப்பதால், அங்கு சென்று ஒட்டிக்கொள்ளலாம் என தேமுதிக தரப்பு தொடர்ந்து ஸ்டாலின் வீட்டுக் கதவை தட்டி வருகிறது. இந்நிலையில், கூட்டணி கட்சிகளுக்கு சீட் ஒதுக்கியாகிவிட்டது என்பதை உறுதிபட தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், திமுக 20 தொகுதிகளில்  போட்டியிடும் என்பதை திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

மு.க.ஸ்டாலினின் அதிரடி அறிவிப்பால், திரிசங்கு சொர்க்கத்தில் நிற்கும் தேமுதிக, தனித்துப் போட்டியிடலாமா என ஆலோசனை நடத்தி வருகிறது. இதனிடையே ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கும் அதிமுக சீட் ஒதுக்காததால், அவர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet