Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

திமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிப்பு…

0 Comments

Published on: Friday, March 15th, 2019 at 9:10 PM

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகியவை தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளன.

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கட்சி கோவை மற்றும் மதுரை தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளில் அந்த கட்சி சார்பில் களம் இறங்கும் வேட்பாளர்களை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் சென்னையில் அறிவித்து அறிமுகப்படுத்தினார். கோவையில் முன்னாள் எம்.பி நடராஜனும், மதுரையில் எழுத்தாளர் சு. வெங்கடேசனும் போட்டியிடுவதாக அவர் தெரிவித்தார்.

அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் இருவருக்கும் , மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், முன்னாள் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ஆகியோர் சால்வை அணிவித்தனர்.

கோவை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள 69 வயதான நடராஜன் முன்னாள் எம்.பி. ஆவார். கோவை தொகுதியில் ஏற்கனவே 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு 38,664 வாக்கு வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பிரபுவை வென்றவர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரான 49 வயதான சு. வெங்கடேசன் மதுரை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். காவல் கோட்டம் என்ற நூலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற அவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.

மதுரை, திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த அவர், நான்கு கவிதை தொகுப்புகள், கலாச்சாரத்தின் அரசியல், ஆட்சித் தமிழ் ஒரு வரலாற்றுப் பார்வை, வைகை நதி நாகரீகம், சமயம் கடந்த தமிழ், கதைகளின் கதை, உட்பட 16 நூல்களையும் எழுதியுள்ளார். தமிழரின் தொல்நாகரீகத்தின் சான்றான கீழடி அகழாய்வு பிரச்சனையை உலகறியச் செய்வதில் முதன்மை பங்கு வகித்தவர்.

இதேபோன்று ராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் கே.நவாஸ் கனி போட்டியிட உள்ளதாக அந்த கட்சி அறிவித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் குருவாடியைச் சேர்ந்த நவாஸ் கனி, இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியின் கௌரவ ஆலோசகராக உள்ளார். எஸ்.டி கூரியர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான அவர், தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறை.

இதே போன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாகப்பட்டினம் தொகுதி வேட்பாளராக எம். செல்வராஜையும், திருப்பூர் தொகுதி வேட்பாளர் கே.சுப்பராயனையும் அறிவித்துள்ளது. திருவாரூரில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழுக்கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு, வேட்பாளர்களை அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet