Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கீழே கிடந்த 100 ரூபாய்… எடுக்கச் சென்ற முதியவர் பறிகொடுத்தது ஒரு லட்சம்…

0 Comments

Published on: Tuesday, September 3rd, 2019 at 12:14 PM

100 ரூபாய்க்கு ஆசைப்பட்டு, வாழ்நாள் முழுதுவம் உழைத்த உழைப்பிற்கான செட்டில்மென்ட் தொகையை முதியவர் ஒருவர் பறிகொடுத்த நிகழ்வு சென்னையில் நடந்துள்ளது.

சென்னை கொளத்தூர் அடுத்த புழல் லட்சுமி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் 60 வயதான சீனிவாசன். இவர் கடந்த 20 வருடங்களுக்கு முன் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். அந்நிறுவனம் மூடப்பட்டு தொழிலாளர்களுக்கு சிறிதுசிறிதாக செட்டில்மென்ட் தொகை வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த வாரம் ரூ.2 லட்சம் பணம் சீனிவாசன் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட குறுஞ்செய்தி அவரது மொபைலுக்கு வந்தது. இதை அடுத்து புழல் கேம்ப் அருகிலுள்ள இந்தியன் வங்கியில் உள்ள தனது கணக்கில் இருந்து சீனிவாசன் ஒரு லட்சம் ரூபாயை மட்டும் எடுத்தார். பின்னர் இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங் கவரில் பணத்தை வைத்துக் கொண்டு வீட்டிற்கு புறப்பட்டார்.

சீனிவாசனை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள், ரூ.100 தாள் உங்கள் பாக்கெட்டில் இருந்து விழுந்து விட்டது என்று கூறி அவரது கவனத்தை திசைதிருப்பி உள்ளனர். வண்டியை நிறுத்திய சீனிவாசன், இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் கவரில் பணம் வைத்திருப்பதை மறந்துவிட்டு வண்டியை நிறுத்தி, ரூ.100 ரூபாய் நோட்டை எடுப்பதற்காக சென்றார்.

அந்த நேரத்தை பயன்படுத்திய அந்த நபர்கள் இருசக்கர வாகனத்தில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றனர். சாலையில் யாருமில்லாததால் கத்திக் கூப்பாடு போட்டபடி திருடர்களைத் துரத்தியுள்ளார். கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் மறைந்துவிட்டனர். இதை அடுத்து அருகில் உள்ள காவல்நிலையத்தில் சென்று நடந்த விவரங்களைக் கூறி புகாரை அளித்தார்.

தனிப்படை போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளின் அடிப்படையில் திருடர்களை தேடி வருகின்றனர். வேலையை விட்டு அனுப்பப்பட்ட நிறுவனத்திலிருந்து 20 ஆண்டுகள் போராடி பெற்ற பணத்தை 20 நிமிடத்தில் முதியவர் பறிகொடுத்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பணம், நகை உள்ளிட்டவற்றை கொண்டு செல்லும்போது, மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், அறிமுகம் இல்லாதவர்கள் திசைதிருப்பும் செயல்களில் ஈடுபட்டால் அதற்கு இரையாகி விடக்கூடாது என்பதையே இந்த சம்பவம் உணர்த்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet