0 Comments
Published on: Thursday, March 7th, 2019 at 11:44 AM
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த அப்பாவி வியாபாரிகளை தாக்கிய விவகாரத்தில் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
ஜம்மு-காஷ்மீர் புல்வாமாவில் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் 40 பேர், தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த தாக்குதலுக்குக்குப் பிறகு, காஷ்மீரை சேர்ந்தவர்கள் குறிவைத்து தாக்கப்படுவதாகவும், துன்புறுத்தப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. இத்தகைய செயல்கள் ஏற்புடையவை அல்ல என பிரதமர் மோடி கூறியிருந்தார்.
மேலும் காஷ்மீரிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், சாலையோரத்தில் உலர்பழங்களை அப்பாவி காஷ்மீர் வியாபாரிகள் 2 பேர் விற்றுக்கொண்டிருந்தனர். அவர்கள் பல ஆண்டுகளாக அங்கு வியாபாரம் செய்து வந்ததால், அவர்களை நிறைய பேருக்கு தெரிந்திருந்தது.
இந்த நிலையில் புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, பொதுமக்களும், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், லக்னோவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, விஷ்வ இந்து தள் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிலர், சாலையோரம் பழங்களை விற்றுக் கொண்டிருந்த அப்பாவி காஷ்மீர் வியாபாரிகளை கொடூரமாக தாக்கத் தொடங்கினர்.
பல ஆண்டுகளாக அங்கு வியாபாரம் செய்துவரும் அவர்களை தாக்கியவர்களிடம் இருந்து, மனிதநேயம் மிக்க உள்ளூரை சேர்ந்தவர்கள் சிலர் காப்பாற்றியுள்ளனர். விஷ்வ இந்து தள் என்ற அமைப்பைச் சேர்ந்த ஒருவன் காஷ்மீரிகளை தாக்கிய வீடியோவை இணையத்திலும் பதிவேற்றியுள்ளான். அதில் காஷ்மீரை சேர்ந்தவர்கள் என்பதாலேயே தாக்குதவாக கூறுவதும் பதிவாகியுள்ளது.
அந்த வீடியோவின் அடிப்படையில் தாக்குதலில் ஈடுபட்ட ஒருவனை கைது செய்துள்ள காவல்துறையினர், மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.
No comments yet