Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கால் டாக்சி ஓட்டுநர்களின் வாழ்க்கையைச் சொல்லும் ‘இயக்கி’…

3 Comments

Published on: Monday, February 18th, 2019 at 9:01 AM

கால் டாக்சி ஓட்டுநர்களின் வாழ்க்கையை வலியுடன், உண்மையான புரிதலோடும் வெளிப்படுத்தியிருக்கும் ‘இயக்கி’ என்ற குறும்படம் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், சமூகவலைதளங்களில் வைரலாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சென்னை உள்பட இந்தியா முழுவதும் பெருநகரங்களில் ஓலா, உபேர் உள்ளிட்ட பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் தங்களது கார்களை இணைத்துக் கொண்ட கால் டாக்சி உரிமையாளர்கள், தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். ஆனால், அவர்களை இந்த சமூகம் வெறும் கால் டாக்சி ஓட்டுநர்களாக பார்த்து வருகிறது.

கால் டாக்சி ஓட்டுநர்கள் இந்த சமூகத்தில் அனைத்து தரப்பினரும் துச்சமாக மதித்து, அவர்களை நடத்தும் விதத்தை துல்லியமாக பதிவு செய்துள்ளது இயக்கி குறும்படம். வெறும் 26 நிமிடத்தில் கால் டாக்சி ஓட்டுநர்களின் வாழ்க்கையை இவ்வளவு கனகச்சிதமாக யாராலும் சொல்ல முடியாது.

ஆனால், அதை மிகவும் நேர்த்தியாக செய்துள்ளார் இயக்குநரும், நடிகருமான ஷான். இந்த படத்தை இயக்குவதற்காகவே, தானும் ஒரு கால் டாக்சி ஓட்டுநராக மாறிய அவர், சுமார் 500 ட்ரிப்புகள் ஓட்டி, அதில் கிடைத்த அனுபவங்களைப் பதிவு செய்துள்ளார் இயக்கி குறும்படத்தில்.

இந்த படம் நேர்த்தியாக வெளிவந்திருப்பதற்கு மற்றொரு முக்கிய காரணம் ஒளிப்பதிவு. திரைப்படத்திற்கு எந்தவிதமான ஆங்கில், எவ்வளவு உழைப்பு கொடுக்க வேண்டுமோ, அதை இந்த குறும்படத்திற்கு கொடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர் ஜெய்னுல் ஜாஃப்ரி.

இதேபோல் இசையமைப்பாளர் விபின், எடிட்டர் பிரேம் ஆகியோரும் தங்களது பணியை மிக நிறைவாக செய்து, படம் நேர்த்தியாக வெளிவர மிகவும் உறுதுணையாக இருந்துள்ளனர் என்றால் அது மிகையில்லை. அதேபோல், இப்படி ஒரு படத்தை தயாரித்ததற்காக, அமிகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ராட்காஸ்ட் மீடியா நிறுவனத்திற்கு பாராட்டைத் தெரிவித்தே ஆக வேண்டும்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதியும், டீசரை இயக்குநர் பா.ரஞ்சித்தும் வெளியிட்ட நிலையில், நேற்று சென்னை தியாகராயர் நகரில் உள்ள எம்.எம். திரையரங்கில் இந்தப் படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டது. சிறிதுநேரத்தில் பிகைண்ட்வுட்ஸ் நிறுவனத்தின் யூடியூப் பக்கத்தில் ’இயக்கி’ குறும்படத்தை நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தின்மூலம் வெளியிட்டார்.

’இயக்கி’ குறும்படத்தை பார்க்கும்போது, அண்மையில் தற்கொலை செய்து கொண்ட கால் டாக்சி ஓட்டுநர்கள் ராஜேஷ், மணிகண்டன், முத்துக்குமார் ஆகியோர் நினைவுக்கு வந்து போகிறார்கள். ஒரு போலீஸ்காரர் திட்டியதால் அவர்களது மனம் எந்த அளவுக்கு புண்படுகிறது. வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் கால் டாக்சி ஓட்டுநர்களிடம் நடந்து கொள்ளும் விதமும் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த படம் கால் டாக்சி ஓட்டுநர்களின் வாழ்க்கைப் படம்.

வாழ்த்துகள் ’இயக்கி’ டீம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3COMMENTS