Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

’கனா’ படம் எப்படி இருக்கு… விமர்சனம்

0 Comments

Published on: Sunday, December 23rd, 2018 at 8:01 PM

அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், முக்கியப் பாத்திரத்தில் சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்திருக்கும் படம் ‘கனா’.

விவசாயத்தை மூச்சாகவும், கிரிக்கெட்டை பேச்சாகவும் நினைக்கும் விவசாயி முருகேசன் (சத்யராஜ்) தந்தையின் இறுதிச் சடங்கில் கூட ஸ்கோர் கேட்கும் அளவிற்கு கிரிக்கெட் காதலர். ஒருமுறை இந்தியா தோல்வி அடைந்ததைப் பார்த்து கண்கலங்கு அப்பாவைப் பார்த்து கிரிக்கெட் விளையாடி இந்தியாவை ஜெயிக்க வைப்பேன் என கிரிக்கெட்டை விளையாட ஆரம்பிக்கும் முருகேசன் மகள் கௌசல்யா (ஐஸ்வர்யா ராஜேஷ்). கௌசல்யாவிற்கு கிரிக்கெட் மீது வெறி, ஆனால் பெண் என்பதால் ஏகப்பட்ட தடைகள்.

முருகேசனுக்கு விவசாயத்தின் மீது வெறி. அவருக்கு வாழ்வதிலேயே தடைகள் ஏற்படுகின்றன. இருவரின் பயணமும் என்ன ஆனது என்பது மனதை கனமாக்கும் கிளைமாக்ஸ் இவர் உண்மையில் நடிகைதானா இல்லை ஏதேனும் கிரவுண்டில் இருந்து கூட்டி வந்த விளையாட்டு வீராங்கனையா என நினைக்கும் அளவுக்கு ஐஸ்வர்யா ஆஃப் ஸ்பின்னராக பந்தை சுழற்றி வீசி புழுதி பறக்க விடுகிறார்.

‘கிரிக்கெட்ட சீரியஸா பார்க்குற நாம, விவசாயத்தை விளையாட்டா கூட பார்க்க மாட்டேங்கறோமே’ என கண்கலங்குவது, விளக்கமாறு பிய்ந்து போகும் அளவிற்கு அடி வாங்கி மனதுக்குள் புழுங்குவது என நடிப்பில் மிரட்டுகிறார். நிச்சயம் அடுத்த ஆண்டு சிறந்த நடிகைக்கான பரிந்துரைப் பட்டியல்கள் அத்தனையிலும் ஐஸு வலம் வருவார்.

சத்யராஜ்… இவருக்கு என்னதான் வயசு, ஐந்து வயது குழந்தைக்கு அப்பா என்றாலும் சரி, பதினைந்து வயது மகளுக்கு அப்பா என்றாலும் சரி, அதெப்படி இவ்வளவு கச்சிதமாக பொருந்துகிறார். ‘என் பொண்ணுக்கு திறமை இல்லைன்னா அவளே போக மாட்டா, ஆனா அவ பொட்டப் புள்ளைனு காரணம் சொன்னீங்க வெட்டிப் போட்டுடுவேன்‘ என்கையில் சத்யராஜுக்கு நிச்சயம் பெண்களின் கரகோஷம் கேட்கும்.

‘ஆசபடறதுனா சும்மா இல்லடி, அடம்பிடிக்கத் தெரியணும்‘ என திடீர் திருப்புமுனை கொடுக்கும் ரமா அசத்தல் நடிப்பு. முன்பாதியில் ஐஸ்வர்யாவின் கிராமத்து அத்தியாங்கள், விவசாய பிரச்சனைகள் என பயணிக்கும் கதை நெல்சன் திலீப்குமாராக வரும் சிவகார்த்திகேயனால் சட்டென வேகம் குறைகிறது. சிவகார்த்திகேயனின் கெட்டப், நடிப்பு என எல்லாமே முந்தைய ‘சக்தே இந்தியா‘ ஷாருக் முதல் ‘இறுதிச்சுற்று’ மாதவன் வரை என சினிமா கோச் டெம்ப்ளேட்டாக தெரிகிறது. ஆனாலும் ஆர்ப்பாட்டம் இல்லாத சிவாவை பார்ப்பது ஆச்சர்யம்தான்.

டெல்டா பகுதி வறட்சி, கிராமத்து இளைஞர்களின் கிரிக்கெட் அத்தியாயம், நெஞ்சை படபடக்க வைக்கும் கிளைமாக்ஸ் கிரிக்கெட் போட்டி என தினேஷ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். திபு நிணன் தாமஸின் பின்னணி இசை படத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறது. ‘வாயாடி பெத்தபுள்ள’ ஊஞ்சலா ஊஞ்சலா, ‘சவால்‘ பாடல்கள் படம் முடிந்தும் முணகச் செய்கின்றன.

‘இவன் ஜெயிச்சுடுவானு சொன்னா இந்த உலகம் கேட்காது, ஆனால் ஜெயிச்சவன் சொன்னா உலகமே கேட்கும்’ ‘உன்னால முடியாதுனு சொன்னா நீ நம்பவேண்டியது அவங்களை இல்லை, உன்னை’ இப்படி படம் முழுவதும் ஆவ்சம் ரக பன்ச்கள்.

விவசாயம்- கிரிக்கெட் என இரண்டையும் ஒரே நேர்க்கோட்டில் எடுத்துச்சென்று கதையைப் பின்னிய விதத்தில் அறிமுக இயக்குநர் அருண்ராஜா காமராஜா திரைக்கதைக்கு கொடுத்த மெனெக்கெடல் நன்றாகவே தெரிகிறது. ‘கனா’ ஒதுக்கவே முடியாத ஒவ்வொரு பெண்களின் சுதந்திரக் ‘கனா’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet