Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

எச்.ராஜாவை நடமாட விடக்கூடாது – அதிமுக எம்.பி. பேச்சால் பரபரப்பு

0 Comments

Published on: Wednesday, September 19th, 2018 at 1:33 PM

அதிமுக எம்.பியும், கடலூர் மேற்கு மாவட்ட செயலாளருமான அருண்மொழி தேவன், பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், கடந்த 2.9.2018 இல் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் இந்து கோயில்கள் மீட்பு இயக்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.

இந்தப் போராட்டத்தில் எச்.ராஜா பேசும்போது, திட்டக்குடி குளத்தை ஆக்கிரமிச்சது யாரு? சிட்டிங் எம்.பி அருண்மொழிதேவன். ஒரு எம்.பி-யாக இருக்குற ஆள், அதுவும் சிட்டிங் எம்.பி, கோயில் நிலத்தை 200 ஏக்கர் அபகரிச்சு இருக்கார். எங்கிட்ட எல்லா டாக்குமென்ட்டும் இருக்கு. கழகம் என்றாலே கலகம்தான். எரிகின்ற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி’ என்று பேசியுள்ளார்.

நான் கோயிலுக்குச் சொந்தமான ஒரு சதுர அடி இடத்தைகூட அபகரிக்கவோ, ஆக்கிரமிப்பு செய்யவோ இல்லை. 100% உண்மைக்குப் புறம்பாகப் பேசியுள்ளார். அவர் வேண்டுமென்றே என்னையும் அ.தி.மு.க-வையும் குறித்து அவதூறு பேச வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தோடு பேசியுள்ளார். அவருடைய பேச்சு ஒரு ஃபேஸ்புக் பதிவில் இருப்பதை நேற்றுதான், நான் பார்த்து தெரிந்துகொண்டேன். என்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுகின்ற வகையில் அவருடை பேச்சு உள்ளதால் எச்.ராஜா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் அருண்மொழி தேவன் தெரிவித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எம்.பி. அருண்மொழி தேவன், ஒரு எம்.பி.-யை அவன் இவன் என்று எச்.ராஜா ஏக வசனத்தில் பேசுகிறார். ஒரு வக்கில்லாத வகையில்லாத ராஜா, தமிழகத்தில் மத கலவரத்தை ஏற்படுத்த முயன்றால், அதனை அதிமுக ஆட்சி பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது என்றார். எச்.ராஜா மீது உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வரப்படும் என்றும், எம்.பி. அருண்மொழி தேவன் கூறினார். மேலும், எச்.ராஜாவையும், அவரைப் போன்று கலவரத்தை ஏற்படுத்த முயலும் மேலும் சில நபர்களையும் நடமாட விடக்கூடாது என்றும் அருண்மொழித்தேவன் தெரிவித்தார்.

ஏற்கெனவே, எச்.ராஜாவை கைது செய்யக்கூடாது என டெல்லி மேலிடம், தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்த நிலையில், தற்போது எம்.பி. அருண்மொழித்தேவனின் வலியுறுத்தல், எடப்பாடி பழனிசாமிக்கு தலைவலியை ஏற்படுத்தியிருப்பதாக, தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet