Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

இன்ஸ்பிரேஷனா…? காப்பியா…? இம்ப்ரூவைசேஷனா..? – பிகில் இயக்குனர் அட்லீயும்…சர்ச்சைகளும்…!

0 Comments

Published on: Thursday, October 17th, 2019 at 2:12 PM

கற்பனைக்கு எல்லைகள் கிடையாது… என்ன வேண்டுமென்றாலும், எதை வேண்டுமென்றாலும் நாம் கற்பனை செய்யலாம்… இன்னும் சினிமாவை பொறுத்தவரை ஒரு ஹீரோ நூறு வில்லன், நூறு ஹீரோ நூறு வில்லன்… இப்படி என்ன வேண்டுமானாலும் யோசிக்கலாம். ஆனால் அவற்றை திரையில் சுவாரஸ்யமாக கொண்டு வருவதில் தான் இருக்கிறது சூட்சமம். ஜாம்பவான்கள்களே சறுக்குவது இந்த இடத்தில் தான், இயக்குனர் சிகரம் பாலச்சந்தர், இமயம் பாரதிராஜா, தொடர்ந்து ஹிட் கொடுத்த பாக்யராஜ், தரமான கிளாசிக்குகளை கொடுத்த மகேந்திரன், பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர், கலைஞானி கமல் இப்படி சறுக்கியோர்களின் லிஸ்ட் நீளம். அறிவியலில் ஆரம்ப காலத்திலிருந்து மேம்படுத்தியவருக்கு இருக்கும் மரியாதை கண்டுபிடித்தவருக்கு கிடைப்பதில்லை, அது எந்த கருவியாக இருந்தாலும் சரி, கருத்தாக இருந்தாலும் சரி… அதுதான் தற்போது சினிமாவிலும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது

இயக்குனர் அட்லீயின் ஆரம்பம்…

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மாணவர் என்பதாலோ என்னவோ, ஆரம்பத்திலிருந்தே அட்லீ மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதுவும் இயக்குனர் ஷங்கர் ஒரு நேர்காணலில், “விரைவில் என் அசிஸ்டண்ட் அட்லீனு ஒருத்தன் வரான், அவன் பாருங்க, ஒரு கலக்கு கலக்குவான்” என்று கூறியதிலிருந்தே அட்லீ மீது அனைவரின் கவனம் விழ ஆரம்பித்தது. முதல் படமே ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா என ஹாட் ஸ்டார் காஸ்ட்டுடன் ஆரம்பித்தார் அட்லீ. அந்த படத்திற்கான விளம்பரங்களே ஒரு நெகட்டிவ் பப்பிளிசிட்டி டிரெண்டில் டிசைன் செய்தார் அவர். ஆர்யா – நயன்தாரா திடீர் கல்யாணம் என்பது போல போஸ்டர்கள் வெளியாகின. பட ஆடியோ லான்ச், அடிக்கடி நடிகைகளுக்கு நடுவில் நின்று போட்டோ என அட்லீ அனைவருக்கும் அறிமுகமாக ஆரம்பித்தார். ராஜா ராணி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அப்போது ஆரம்பித்தது சர்ச்சை இது, மணிரத்னத்தின் மௌனராகம் என ஒரு சாரார் போர்க்கொடி உயர்த்தினர்.

பிரம்மாண்ட பிரியர் அட்லீ

பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரை இப்போது பாகுபலி இயக்குனர் ராஜமௌலியும் பங்கிட்டு கொண்டாலும், தமிழை பொருத்தவரை பிரம்மாண்ட இயக்குனர் என்றால் அது ஷங்கர் தான். பல கோடி பட்ஜெட், கிராப்பிக்ஸ் காட்சிகள், ஹாலிவுட்டில் ஹிட்டான சீன்கள் என ஷங்கர் தன்னுடைய ஸ்டைலில் மிரட்டினாலும் அவர் தொழில் கற்றுக்கொண்டது, சாதாரண பட்ஜெட் இயக்குனர்களான எஸ்.ஏ.சந்திரசேகர், பவித்திரன் உள்ளிட்டோர்களிடமிருந்து தான். ஆனால் அட்லீயின் கதையே வேறு அவர், தொழில் கற்றுக்கொண்டதே பிரம்மாண்டத்திடமிருந்து தான், சோ அவர் யோசிக்க ஆரம்பிப்பதே ஷங்கர் விட்ட இடத்திலிருந்து தான். அதனால்தான் பாடல்களுக்கு மட்டுமே பல கோடிகள் தேவைப்படுகிறது அட்லீக்கு. சிறந்த கதைக்கு இந்த மாதிரியான ஜிகினா ஜபர்தஸ் எல்லாம் தேவைப்படுவதில்லை, என்கிறார்கள் சினிமாவை விமர்சகர்கள்.

இன்ஸ்பிரேஷனா…? காப்பியா…? இம்ப்ரூவைசேஷனா..?

40 அல்லது 30 வருடங்களுக்கு முன்பு நாம் மற்ற மாநில படங்களை பார்க்க வேண்டும் என்றால் கூட சிறப்பு காட்சி அல்லது அதற்காக நேரம் ஒதுக்கப்பட்ட திரையரங்குகளில் தான் சென்று பார்க்க முடியும். இது மேல்தட்டு மக்களின் நிலை, சினிமா சம்பந்தப்பட்டவர்கள் வெளிநாட்டு படங்களை சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு சென்றோ, அல்லது இந்தியாவிலேயே சிறப்பு ஏற்பாட்டின்படி அதனை பார்க்க முடியும். ஆனால் சாமானியன் நிலை, சொந்த மொழி படத்தை தவிர வேறு எந்த படங்களையும் பார்க்கும் வாய்ப்பு இல்லை. ஆனால் இப்போது நிலைமை தலைகீழ், ஹாலிவுட் படங்களை அமெரிக்க மக்கள் முதல்நாள் முதல்ஷோ பார்க்கும் அதே நேரத்தில் நாமும் இங்கு அதனை பார்க்கிறோம். சினிமா ரசிகர்கள் தற்போது ரசிகர்கள் என்பதையும் தாண்டி, ஆராய்ச்சியாளர்களாக மாறி விட்டார்கள். ஒரு படத்தின் டீசர் வெளியானால் போதும், எந்த படத்திலிருந்து இந்த சீன்கள் எடுக்கப்பட்டுள்ளன, இந்த வசனம் இந்த படத்தில் வருவது, இந்த மியூசிக் இதனுடைய COPYCAT, இந்த டிசைன் உடையை ஹீரோ அந்த படத்தில் போட்டு வருவார் என ஆதாரங்களுடன் விளக்கமாக எழுதி விடுகிறார்கள். பாலச்சந்தர், பாரதிராஜா உள்ளிட்டோருக்கு இருந்த சுதந்திரம் அட்லீக்கு இல்லை என்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள்.

அட்லீ நம்புவது இம்ப்ரூவைசேஷனையா…?

இதுவரை எடுத்தது நான்கு படங்கள், ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில்,….. இதில் ராஜா ராணி – மௌனராகம், தெறி – சத்ரியன், மெர்சல் – அபூர்வ சகோதரர்கள், பிகில் – சக்தே இந்தியா… இதுதான் அட்லீ மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு. ஆனால் உண்மையில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள படங்களுக்கும் இந்த படங்களுக்கும் ஒரே ஒற்றுமை மூலக்கரு… அதை ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். ஆனால் செயல்படுத்தி, எடுக்கப்பட்ட விதம் வேறு என்கிறது அட்லீ தரப்பு. மூலக்கரு தான் படைப்பின் அடிநாதமே, அதை கூட உன்னால் உருவாக்க முடியாமல் திருடுகிறாய் என்றால் நீ என்ன இயக்குநர் என்கிறார்கள் எதிர் தரப்பினர்.

அட்லீக்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு..?

அட்லீ மீது எதிர்ப்பு அதிகளவில் இருப்பதற்கு காரணம் விஜய் படத்தை தொடர்ந்து எடுத்து வருகிறார், அதுவும் இவர் கிறிஸ்துவர் என்பதால் கிறிஸ்துவ மதத்தினருக்கும் அல்லது இந்து அல்லாதவர்களுக்கும் படத்தில் எப்போதும் மெயின் ரோல் கொடுக்கிறார் என்பது ஆரம்பத்திலிருந்து புகையும் சர்ச்சை. பட்ஜெட்டை இஷ்டத்திற்கு இழுத்து விடுவதால் பெரும் நஷ்டம் ஏற்படுவதாக சினிமா தரப்பினர் புகார். பெரிய இயக்குநர்களின் கதையை திருடி அவர்களிடமே சென்று படம் ரிலீசானவுடன் வாழ்த்து பெருவது அட்லீ ஸ்டைல், இது பலருக்கு எரிச்சலை உண்டு செய்வதை உணர முடிகிறது. ஷங்கருக்கும் அட்லீக்கும் இருக்கும் ஒற்றுமை பிரம்மாண்டம், பெரிய வித்தியாசம் பேச்சு, அட்லீயின் பேச்சில் ஷங்கர் பேச்சில் இருக்கும் தன்னடகம் இருக்காது. நான் பேசக்கூடாது படம் பேச வேண்டும் என்பது ஷங்கரின் ஸ்டைல், ஆனால் அட்லீ இதனை நேர்மாறாக செய்வதால் படம் ரிலீசாகும் முன்பே சர்ச்சைக்குள் ஒவ்வொரு முறையும் சிக்கிக்கொள்கிறார். சக இயக்குனர்கள் மற்றும் சினிமா பிரபலங்களுடன் அட்லீ பெரிதாக நட்பு பாராட்டாததும் தான் அவர் சர்ச்சைக்குள் சிக்கும் போது அவரை காப்பாற்ற யாரும் வராததற்கு முக்கிய காரணம் என்றே கருத்தப்படுகிறது.

சினிமா எனும் இம்ப்ரூவைசேஷன்

சினிமாவை பொறுத்தவரை காதல், ஆக்ஷன், ரோமான்ஸ், திகில், மர்மம், காமெடி, கற்பனை இதுதான் பேசிக், இதைத்தாண்டியும் நிறைய பிளாட்டை இப்போது நவீன திரையுலகத்தினர் முயன்றுக்கொண்டிருக்கிறார்கள். இந்த 7 பிளாட்டை வைத்து பார்த்தால், உலகத்தில் ஒரு படத்தின் காப்பிதான் மற்றொரு படம். ஆரம்பகாலத்தில் வெளியான சார்லி சாப்ளினின் சிட்டி லைட்ஸ், மார்டன் டைம்ஸ், தி கிட், லைம் லைட் ஆகிய படங்களை தழுவி உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான படங்கள் எடுக்கப்பட்டுள்ளன, அதுவும் சார்லி சாப்ளின் உயிரோடு இருந்த போதே…!. அதில் சில படங்கள் சிறப்பான வெற்றியும் பெற்றன.

அதையெல்லாம் பார்த்து அவர் மனதில் கோபம் இருந்திருக்காது, நாம் ஏன் இந்த மாதிரி ஸ்கிரிப்டை இம்ப்ரூ பண்ணாமல் விட்டுவிட்டோம் என அவரை அவரே கேட்டுக்கொண்டிருப்பார். ஒரு பிளாட்டை மக்களுக்கு சுவாரஸ்யமாக கொடுப்பதுதான் சினிமாவில் வெற்றிபெறுவதற்கான கீவேர்ட், நம் கற்பனையை சுவாரஸ்யமாக கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் அடைப்பதுதான் சாமர்த்தியம்.. அதை சிறப்பாக செய்ததால் தான் முதல் பத்தியில் குறிப்பிட்டபடி ஒரு ஹீரோ நூறு வில்லன் என்ற கற்பனை மெட்ரிக்ஸ் என்ற ஹாலிவுட் படத்திலும், நூறு ஹீரோ நூறு வில்லன் என்ற கான்செப்ட் எக்ஸ்-மேன், அவென்ஜர்ஸ் போன்ற படங்களிலும் சாத்தியமானது.

இமேஜினேஷன் மற்றும் இம்ப்ரூவைசேஷனின் பவர் இதுதான், கமல்ஹாசனின் சினிமா வாழ்க்கையில் மைல்கற்களாக கருதப்படும் பாதி படங்களுக்கு மேல் இந்த வகையில் எடுக்கப்பட்ட படங்கள்தான், ராஜாபார்வை, மகாநதி, மைக்கேல் மதன காமராஜன், அன்பே சிவம், தெனாலி, பஞ்சதந்திரம் இப்படி நிறைய படங்கள் ஆங்கிலத்திலிருந்து எடுக்கப்பட்டவை… ஆனால் அவரின் படங்களில் மூலக்கரு மட்டும் ஒன்றாக இருக்கும், மீதி அனைத்தும் நம் கலாச்சாரத்திற்கு ஏற்றார் போல் மாற்றப்பட்டிருக்கும்.

இதை கூறியவுடன் கமலுக்கு ஒரு நியாயம் அட்லீக்கு ஒரு நியாயமா என்ற கேள்வி எழுவதை தடுக்க முடியாது.. உண்மைதான்… இருவருக்கும் ஒரே நியாயம்தான்… ஆனால் கமல் இவ்வகையான தழுவல் படங்களை எப்போது 100 அல்லது 150 கோடிகள் செலவில் எடுத்ததில்லை, மிக மிக குறைந்த பட்ஜெட்டில்தான் இவ்வகையான தழுவல் படங்களை எடுத்தார். பிரம்மாண்ட படங்களுக்கு சொந்த கதை, கருவை தான் அவர் மூலதனமாக முதலீடு செய்வார். இதில் தான் அட்லீ தவறிவிடுகிறார்… நியாயமும் வித்தியாசப்படுகிறது… இதனை அவர் சரி செய்யாத பட்சத்தில்… அவர் மீது எழும் சர்ச்சைகள் ஒயாது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet