Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

இந்தியா த்ரில் வெற்றி – கடைசி ஓவரில் ஹீரோவான விஜய் சங்கர்…

0 Comments

Published on: Wednesday, March 6th, 2019 at 11:05 AM

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாக்பூரில் நடைபெற்ற 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றிபெற்றது. கடைசி ஓவரில் நேர்த்தியாக பந்துவீசிய தமிழகத்தின் விஜய் சங்கர், ஹீரோவாக ஜொலித்தார்.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஏற்கெனவே நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றிபெற்று, தொடரில் முன்னிலை பெற்ற நிலையில், நாக்பூரில் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி, இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஷிகர் தவானும், ரோகித் சர்மாவும் மோசமாக தொடக்கத்தைத் தந்தனர். ரோகித் சர்மா டக் அவுட் ஆன நிலையில், ஷிகர் தவான் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து மோசமாக விளையாடும் தவானுக்கு ஏன் இத்தனை வாய்ப்பு வழங்கப்படுகிறது என்பது தெரியவில்லை.

இந்தியாவை சரிவில் இருந்து மீட்க கோலி – அம்பதி ராயுடு ஜோடி போராடிய நிலையில், அதற்கு பலன் கிடைக்காமல், அம்பதி ராயுடு 18 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்த களமிறங்கிய தமிழகத்தின் விஜய் சங்கர், அதிரடியாக விளையாடினார்.

கோலி – விஜய் சங்கர் ஜோடி 81 ரன் சேர்த்திருந்தபோது, 46 ரன் எடுத்திருந்த விஜய் சங்கர் ரன் அவுட்டானார். அதன்பிறகு வந்த கேதார் ஜாதவ், தோனி ஆகியோரும் சொதப்பினாலும், மறுமுனையில் தெம்பாக நின்ற கோலி, ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தமது 40வது சதத்தை நிறைவு செய்தார்.

பின்னர் வந்த வீரர்களும் சரியாக விளையாடததால், 48.2 ஓவரில் 250 ரன்னுக்கு இந்திய அணி ஆட்டமிழந்தது. எளிதான வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வீரர்களின் தொடக்கம் மிகச் சிறப்பாக இருந்தது. பின்ச் – கவாஜா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 83 ரன் எடுத்திருந்த நிலையில், 37 ரன் எடுத்திருந்த பின்ச் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ஹேண்ட்ஸ்கோம்ப், ஸ்டோய்னிஸ் ஆகியோரும் தங்களது பங்கை சரியாக செய்ததால், ஆஸ்திரேலிய அணி வெற்றி இலக்கை நெருங்கிக் கொண்டிருந்தது.

கடைசி ஓவரில் 11 ரன் எடுக்க வேண்டிய நிலையில், 2 விக்கெட்டுகளை ஆஸ்திரேலியா கைவசம் வைத்திருந்தது. இதனால், அந்த அணி எளிதாக வெற்றிபெற்றுவிடும் என பெரும்பாலானோர் கருதிய நிலையில், கடைசி ஓவரை, தமிழகத்தில் விஜய் சங்கர் வீசினார்.

அரைசதம் கடந்து ஆஸ்திரேலியாவை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருந்த ஸ்டோய்னிசை முதல் பந்திலேயே விஜய் சங்கர் அவுட்டாக்கினார். அப்போதுதான் இந்திய வீரர்கள் மற்றும் ரசிகர்களின் முகத்தில் மகிழ்ச்சியே தோன்றியது. 2வது பந்தில் 2 ரன் எடுத்த நிலையில், 3வது பந்தில் ஜம்பாவை போல்டாக்கினார் விஜய் சங்கர்

ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவரில், 242 ரன்னுக்கு ஆட்டமிழந்ததால், இந்தியா 8  ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்று, தொடரில் 2 – 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் மார்ச் 8ஆம் தேதி, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet