Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

இதயம் காக்கும் செம்பருத்தி… போதைப் பழக்கத்திலிருந்து மீட்கும் மல்லி… எளிய வீட்டு மருத்துவம்..!

0 Comments

Published on: Saturday, January 12th, 2019 at 9:08 PM

வெறும் தேயிலையை நீர் விட்டுக் கொதிக்க வைத்து பால், சர்க்கரை சேர்த்து அருந்தினாலே மனமும் மூளையும் சுறுசுறுப்பாகும்போது அவற்றுடன் சில மூலிகைகளைச் சேர்த்து அருந்தினால் நிறைய நோய்களில் இருந்து விடுபடலாம். மிகச் சாதாரணமாகக் கிடைக்கும் துளசி, இஞ்சி, மல்லி, செம்பருத்தி போன்றவற்றை பால், நீர் விட்டு தேயிலை சேர்த்தும், சேர்க்காமலும் செய்யப்படும் இந்தக் கொதிநீரை சுவை நீர் என்கிறார்கள் இயற்கை மருத்துவர்கள். அந்தச் சுவைநீரை அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி அறிவோமா?

இஞ்சிச் சுவைநீர்

சிறு துண்டு இஞ்சியை தோல் நீக்கி நசுக்கி ஒரு டம்ளர் நீர் விட்டுக் காய்ச்சி பாதியாக வற்றியதும் இரண்டு ஏலக்காயைத் தட்டிப்போட்டு இறக்க வேண்டும். இதில் பால், சர்க்கரை சேர்த்தால் இஞ்சிச் சுவைநீர் தயார். இதைக் குடித்தால் பித்தம் அகலும்; செரிமானக் கோளாறு நீங்கி நெஞ்செரிச்சல், வாய்வுத்தொல்லை நீங்கும். இதனுடன் ஐந்து குங்குமப்பூ இதழ் சேர்த்துக் குடித்தால் கண் பார்வை தெளிவாகும்.

மல்லி சுவைநீர்

மல்லியை லேசாக வறுத்துப் பொடியாக்கி நீர் விட்டுக் கொதிக்க வைத்து இரண்டு ஏலக்காய் சேர்த்து வடிகட்ட வேண்டும். இதை வடிகட்டி பால், பனங்கற்கண்டு சேர்த்துக் குடிக்கலாம். இதனால் வாந்தி, மயக்கம், கிறுகிறுப்பு நீங்கும். மதுப்பழக்கம் உள்ளவர்கள் இந்த மல்லி சுவைநீரை மூன்று மாதம் தொடர்ந்து அருந்தினால் போதைப் பழக்கத்திலிருந்து மீளலாம்.

புதினாச் சுவைநீர்

புதினா இலைகளுடன் தேயிலை, நீர் சேர்த்துக் கொதிக்க வைத்து பாதியாக வற்றியதும் ஏலக்காய் சேர்த்து வடிகட்டி பால், சர்க்கரை சேர்த்துப் பருகலாம். இந்த புதினா சுவைநீர் நாக்குச்சுவையின்மையைப் போக்கும். சளி சேர விடாமல் பார்த்துக் கொள்ளும். சுவாசம் சீராக உதவும்.

செம்பருத்திச் சுவைநீர்

செம்பருத்திப் பூ இதழ்களை (ஐந்து) ஒரு டம்ளர் நீர் விட்டுக் கொதிக்க வைக்க வேண்டும். பாதியாக வற்றியதும் இரண்டு ஏலக்காய், ஐந்து மிளகு, இரண்டு கிராம்பு போன்றவற்றைப் பொடியாக்கிப் போட்டுக் காய்ச்ச வேண்டும். இதை வடிகட்டி பால், பனங்கற்கண்டு சேர்த்துக் குடித்தால் இதயம் தொடர்பான அனைத்து நோய்களையும் வராமல் தடுக்கலாம். குறிப்பாக இதய நாள இறுக்க நோயிலிருந்து விடுபடலாம்.

தாமரை சுவைநீர்

செந்தாமரை அல்லது வெண்தாமரைப்பூ (ஒன்று) இதழ்களை இரண்டு டம்ளர் நீர் விட்டுக் காய்ச்ச வேண்டும். ஓரளவு வற்றியதும் ஐந்து மிளகு,இரண்டு கிராம்பு, இரண்டு ஏலக்காய் தட்டிப்போட்டு ஒரு கொதி வந்ததும் வடிகட்ட வேண்டும். அதனுடன் பால், தேன் அல்லது பனங்கல்கண்டு சேர்த்துக் குடித்தால் இதய படபடப்பு, உடல் சோர்வு நீங்கும். குறிப்பாக இதய வால்வு பிரச்னை சரியாகும். திசுக்கள் புதுப்பிக்கப்படுவதால் முதுமை விலகும்.

துளசி சுவைநீர்

20 துளசி இலைகளுடன் ஐந்து மிளகு, இரண்டு கிராம்பு, இரண்டு ஏலக்காய் சேர்த்து ஒன்றிரண்டாக இடித்து ஒரு டம்ளர் நீர் விட்டுக் கொதிக்க வைக்கவும். நன்றாகக் கொதித்ததும் வடிகட்டி பால், தேன் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் குடிக்க வேண்டும். இதனால், சிகரெட், புகையிலை, பான்மசாலா போன்றவற்றால் பாதிக்கப்பட்ட நுரையீரல், கல்லீரல் புத்துணர்ச்சி பெறும். இந்த சுவைநீர் ஆஸ்துமா நோய் பாதிப்பிலிருந்தும் மீட்கும்.

நெல்லிச் சுவைநீர்

நெல்லிக்காய்களை (மூன்று) இடித்து ஒரு டம்ளர் நீர் விட்டுக் கொதிக்க வைக்கவும். நன்றாகக் கொதித்ததும் ஐந்து மிளகு, இரண்டு கிராம்பு, இரண்டு ஏலக்காய், இரண்டு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து வடிகட்டவும். அதனுடன் சிறிது தண்ணீர், இரண்டு டீஸ்பூன் தேன் சேர்த்துக் குடித்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். இதை வாரம் ஒருநாள் அருந்தினால் போதும்.

அத்திப்பழச் சுவைநீர்

கொண்டைக்கடலை மூன்று டீஸ்பூன் எடுத்து நீர் சேர்த்து முந்தினநாள் இரவு ஊற வைக்க வேண்டும். காலையில் அதை அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கும்போது காய்ந்த அத்திப்பழத் துண்டுகளைச்(இரண்டு) சேர்க்க வேண்டும். இதை வடிகட்டி அதனுடன் பால், பனங்கல்கண்டு சேர்த்துக் குடிக்கலாம். இது எலும்பும் தோலுமாக உள்ள சிறுவர்களுக்கு சீரான உடல் வளர்ச்சி கிடைக்க உதவும்.

பேரீச்சம்பழச் சுவைநீர்

விதை நீக்கிய பேரீச்சம்பழங்களை (ஐந்து) நன்றாக நசுக்கி காய்ச்சிய பசும்பாலில் போட்டுக் கலந்து பனங்கல்கண்டு அல்லது தேன் சேர்த்துச் சாப்பிடலாம். இது இல்லற வாழ்வில் ஈடுபடும் இளம் தம்பதியருக்கு உற்சாகமூட்டும். மாலை நேரங்களில் இந்தச் சுவைநீரை அருந்தினால் சோர்வு நீங்கி உற்சாகம் கிடைக்கும்.

பாதாம் சுவைநீர்

பாதாம்பருப்பு மூன்று, கசகசா ஒரு டீஸ்பூன் எடுத்து மூழ்குமளவு பால் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைத்து மிக்சியில் அரைக்க வேண்டும். அதனுட ஒரு டம்ளர் பால் சேர்த்துக் காய்ச்சி பனங்கல்கண்டு சேர்த்துப் பருகினால் நரம்புகள் வலுப்பெறும். குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு பாதாம் சுவைநீர் மிகவும் நல்லது. வாரத்தில் மூன்று நாள் இதைப் பருகலாம்.

ஆவாரைச் சுவைநீர்

ஆவாரம் பூ, இலை, பட்டை, வேர், விதை என அனைத்தையும் நிழலில் காய வைத்துப் பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். அதில் இரண்டு டீஸ்பூன் எடுத்து நீர் விட்டுக் காய்ச்சி ஓரளவு கொதி வந்ததும் இரண்டு ஏலக்காய், சிறிது லவங்கப்பட்டை சேர்த்துக் காய்ச்சி வடிகட்ட வேண்டும். அதனுடன் சிறிது பால், பனங்கல்கண்டு சேர்த்துப் பருகினால் சர்க்கரைநோய் கட்டுக்குள் இருக்கும்.

– தமிழ்க்குமரன், மூலிகை ஆராய்ச்சியாளர், 9551486617

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet